Published : 26 Sep 2023 03:40 PM
Last Updated : 26 Sep 2023 03:40 PM
சென்னை: சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் உதவியாளராக பணிபுரியும் ஜோதிமணி என்பவரது வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள 30 பேரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் இன்று காலை தொடங்கி அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஊழியராக பணியாற்றும் ஜோதிமணியின் வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அமலாக்கத் துறை விசாரணையில் ஜோதிமணி கமலாலயத்தில் உதவியாளராக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. மேலும், அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், பாஜக தென் சென்னை மாவட்ட தலைவராக உள்ள காளிதாஸ் மற்றும் பாஜக அலுவலக செயலாளர் ஆகியோரை ஜோதிமணியின் வீட்டுக்கு வரவழைத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகம் என்பவருக்கும், ஜோதிமணிக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா, இருவரும் இணைந்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்திலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் ஜோதிமணிக்கு வீட்டுக்கு வந்தபோது, அவர் இல்லை. இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த அதிகாரிகள் அதன்பின்னர் தங்களது சோதனையை தொடங்கினா். 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இந்தச் சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பாஜக தலைமை அலுவலக பணியாளரின் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT