Published : 26 Sep 2023 03:36 PM
Last Updated : 26 Sep 2023 03:36 PM

மத்திய அரசின் போட்டித் தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்: நிர்மலா சீதாராமன்

சென்னை: மத்திய அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.

10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் இன்று 46 இடங்களில் 51,000 பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி, காணொலிக் காட்சி மூலம் பணிநியமன ஆணைகளை வழங்கினார். இதன் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழாவில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 156 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

அஞ்சல் துறை, வருவாய்த் துறை, நிதிச் சேவைகள் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், உயர்கல்வி அமைச்சகம் போன்ற பல்வேறு துறைகளில் நியமிக்கப்பட்டவர்களுக்கு அவர் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவருக்கு பணி நியமன ஆணை வழங்கும் அமைச்சர்

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும். அவ்வாறு பங்கேற்பதன் மூலமே அதிக எண்ணிக்கையில் பணிகளைப் பெற முடியும். மத்திய அரசின் துறைகளில் பணியமர்த்தப்படும் போது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியை கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை சரிவர செய்து வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும். பணியில் சேர்பவர்கள் தங்களின் திறனை மேம்படுத்திக் கொண்டு, அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய உறுதுணையாக இருக்க வேண்டும்" என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து நியமன ஆணைகளை பெற்றுக் கொண்டவர்களுடன், அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். அப்போது, அரசின் அங்கமாக தாங்கள் மாறுவது குறித்தும் பணிநியமனம் பெறும் துறைகளில் தங்களின் பங்குகள் மற்றும் பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றுவது குறித்தும் தேர்ச்சியாளர்கள் அமைச்சரிடம் தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

தேர்ச்சி பெற்ற குறுகிய காலத்திலேயே பணிநியமன ஆணைகளை வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கும் நியமனம் பெற்றவர்கள் நன்றி தெரிவித்தனர். இந்த வேலைவாய்ப்பு விழா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு, 9 ஆவது பகுதியாக இன்றைய வேலைவாய்ப்பு விழா நடைபெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x