Published : 26 Sep 2023 01:30 PM
Last Updated : 26 Sep 2023 01:30 PM
சென்னை: தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தொடர்ந்த வழக்கில் விளக்கம் பெறுவதற்காக நடிகை விஜயலட்சுமியை வரும் வெள்ளிக்கிழமை ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "கடந்த 2011-ம் ஆண்டு அளித்த புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கடிதம் கொடுத்தார். அதன் அடிப்படையிலும், அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும், போலீஸார் வழக்கை முடித்து வைத்தனர். இந்த நிலையில், தற்போது அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, காவல் துறை எனக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
திமுக அரசுக்கு எதிராகவும், திராவிட கொள்கைக்கு எதிராகவும் கருத்துகள் கூறி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2011-ல் முடிக்கப்பட்ட வழக்கை, 12 ஆண்டுகளுக்குப் பின், அரசியல் உள்நோக்கத்துடன் மீண்டும் விசாரிக்கப்படுகிறது. எனவே, இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்" எனவும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 2011 மற்றும் 2023-ல் விஜயலட்சுமி அளித்த புகார்கள் மற்றும் வாபஸ் பெறப்பட்ட விவரங்களை தாக்கல் செய்யவும் காவல் துறைக்கு உத்தரவிட்டது. மேலும், 2011-ல் அளித்த புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்ற நிலையில் அந்த வழக்கை நிலுவையில் வைத்திருந்தது ஏன் என்று கேள்வி எழுப்பி, அதுகுறித்து பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யபட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சீமான் வழக்கை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக நடிகை விஜயலட்சுமி வரும் வெள்ளிக்கிழமை (செப்.29) நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT