Published : 08 Dec 2017 10:02 PM
Last Updated : 08 Dec 2017 10:02 PM

ஓ.பன்னீர்செல்வத்தை இரண்டே முறைதான் சந்தித்தேன்: தொழிலதிபர் சேகர் ரெட்டி தகவல்

சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட டைரியின் பக்கங்கள் என்று தனியார் ஆங்கில செய்தி தொலைக்காட்சி வெளியிட்ட பக்கங்களில் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவரம் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை சேகர் ரெட்டியிடம் கேள்விகளாக வைத்தோம். ‘நம்பினால் நம்புங்கள்’ பாணியில் அவர் அளித்த பதில்களை அப்படியே தருகிறோம்..

மணல் வியாபாரத்துக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்று சில நாட்களுக்கு முன்பு கூட பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தீர்களே..

கடந்த ஓராண்டாகவே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். நாமும் ஏன் இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்று இருந்தேன். இப்போது டைரி பக்கங்கள் வந்ததாக கூறுகிறார்கள். அது டைரிகூட இல்லை; ஒரு துண்டுச்சீட்டுபோல இருக்கிறது. அதில் உள்ளவற்றை யார் எழுதினார்கள் என்றுகூட தெரியவில்லை. அது என் கையெழுத்தும் கிடையாது. எனக்கு டைரி எழுதும் பழக்கமே கிடையாது. நான் அதில் சிலருக்குப் பணம் கொடுத்ததாக கூறுகிறார்கள். நான் ஏன் பணம் கொடுக்கவேண்டும்? எனக்கு என்ன டீலிங் இருக்கிறது?

2001-க்குப் பிறகு போயஸ் கார்டன் மற்றும் அமைச்சர்களுடன் நீங்கள் நெருக்கம் என்கிறார்களே?

2008-ல்தான் கான்ட்ராக்ட் தொழிலுக்கே வந்தேன். அதில் சிறுகச் சிறுக சேமித்து, குருவி கூடு கட்டுவதுபோல நேர்மையாக, வருமான வரி கட்டி முறையாக வியாபாரம் நடத்துகிறோம். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என்று அனைத்து மாநிலங்களிலும் வியாபாரம் செய்கிறோம். 500 லாரிகள், 300 பொக்லைன் எந்திரங்கள்தான் சொத்து. எந்திரங்களின் மதிப்பு ரூ.300 கோடிக்கு மேல்.

பணமதிப்பு நீக்கம் நடந்த பிறகு புதிய பணம் கோடிக்கணக்கில் உங்களிடம் இருந்ததே?

சிம்பிளான விஷயம். ரொக்கப் பரிவர்த்தனை அதிகம் நடக்கும் இடத்தில், பணம் அதிகம் இருக்கும். எங்களுக்கு வருவதெல்லாம் வாடகைப் பண வருமானம். பழைய நோட்டு செல்லாது என்று அறிவித்த பின்னர் புது நோட்டுதானே வரும்.கைப்பற்றப்பட்ட பணத்துக்கான எல்லா கணக்கையும் தாக்கல் செய்துவிட்டோம். சேவை வரி, வருமான வரியாக ரூ.61 கோடி அட்வான்ஸ் கட்டியுள்ளோம். இன்னும் ரூ.100 கோடி கட்டச்சொன்னால்கூட சொத்தை விற்றாவது கட்டுவேன். ஏமாற்றமாட்டேன். ஹரிச்சந்திரன் மாதிரி வாழ்கிறேன்.

ராமமோகன ராவுடன் எப்படி நட்பு?

நாடு முழுவதும் நண்பர்கள் உண்டு. நான் அனைவருக்கும் உதவும் எண்ணம் கொண்டவன். அப்படி இருக்கும் போது அவர் எனக்கு அரசாங்கத்தில் என்ன செய்து கொடுக்க முடியும். டெண்டரை இவருக்குக் கொடு என்று சொல்ல முடியுமா?

தமிழகம் முழுவதும் மணல் குவாரியில் உங்கள் ஆதிக்கம்தான் அதிகம் என்கிறார்களே?

மணல் குவாரியில் என்ன நடக்கிறதே என்றே எனக்கு தெரியாது. ஒரு மணல் குவாரிக்குகூட நான் போய் பார்த்தது கிடையாது. அதற்கு டெண்டரும் கிடையாது. பொதுப்பணித் துறைதான் மணலை விற்கும். அதை அள்ளிப்போட கான்ட்ராக்ட் கொடுப்பார்கள். அதையும் தனியாருக்குக் கொடுப்பார்கள். அதைக்கூட நான் எடுக்கவில்லை. அவர்களுக்கு வாடகைக்கு வாகனம் கொடுப்போம். அவ்வளவுதான்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு நீங்கள் நெருக்கம் என்கிறார்களே?

அவரை வாழ்க்கையில் இரண்டே முறைதான் பார்த்தேன். ஒருமுறை அவரை வீட்டில் பார்த்தேன். அப்போது அவர் முதல்வர். கோயிலுக்கு ஒருமுறை வாருங்கள் என்றேன். வந்தார். அவருடன் போய் தரிசனம் செய்துவிட்டு வரும்போது ஒரு புகைப்படம் எடுத்தேன். அந்த மாதிரி ஆயிரம் பேருடன் புகைப்படம் எடுத்திருக்கிறேன். அதைப் போட்டு ஏமாற்றுகிறார்கள்.

ஓபிஎஸ்ஸுடன் நீங்கள் நெருக்கம் என்று அதிமுக அமைச்சர்களே கூறுகிறார்களே?

எல்லாம் ஒரு டெக்னிக். சும்மா சொல்லிவிட்டு போவோமே என்கிற ரீதியில் சொல்வதுதான்.

முதல்வரின் மகனுடன் சேர்ந்து சாலை டெண்டர் எடுத்தீர்களா?

பாலாஜி டோல்வேஸ் என்று ஆரம்பித்தோம். அவரது சம்பந்தி எனக்கு 15 ஆண்டுகளுக்கு மேல் பழக்கம். இப்போதுதான் அவர் பழனிசாமிக்கு சம்பந்தி. அந்தப் பழக்கத்தின் அடிப்படையில் டெண்டர் எடுத்தோம். ஏன் பிரச்சினை என்று விலகிவிட்டேன்.

முதல்வர் சம்பந்தி என்ற அடிப்படையில் அது எடுக்கப்பட்டதா?

அப்படி எல்லாம் எடுக்க முடியாது. அது ஓபன் டெண்டர். அதில் எதிர்தரப்பு ஜிஎம்ஆர் என்ற பெரிய நிறுவனம். டெல்லி ஏர்போர்ட் கட்டியவர்கள். அதை சாதாரணமாக எடுக்க முடியாது என்பதால், விலகிவிட்டேன்.

1998-ல் அதிமுகவில் இணைந்தீர்களா?

1998-ல் உறுப்பினர் ஆனேன். இப்போதும் உறுப்பினர்தான்.

போயஸ் கார்டன், சசிகலாவுடன் பழக்கம் உண்டு என்கிறார்களே?

சசிகலாவை வாழ்நாளில் ஒருமுறைகூட பார்த்தது இல்லை. 3 முறை போயஸ் கார்டன் போயிருக்கிறேன். ஜெயலலிதாவுக்கு பிரசாதம் கொடுக்கச் சென்றேன்.

1994-ல் சாதாரணமாக இருந்த சேகர் ரெட்டி இப்போது எப்படி இவ்வளவு அபார வளர்ச்சி அடைய முடிந்தது?

ஏன் 15 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி டர்ன் ஓவர் செய்யும் கம்பெனியை உருவாக்க முடியாதா? 2008-2017 வரையிலான 9 ஆண்டுகளில் 50, 100, 200 கோடி என்று டர்ன் ஓவர் செய்தேன். இது சாதாரண வளர்ச்சி. இன்னும் 10 மடங்கு அதிகம் ஆகியிருக்கலாம். இந்த ஆண்டு இப்பிரச்சினையால் வியாபாரமே செய்ய முடியவில்லை. ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு ரூ.100 கோடி வருமான வரி கட்டுகிறேன். அப்படி கட்டுபவர்கள் 1000 பேர்கூட இல்லை. வங்கிக் கடன் வாங்கி ஏமாற்றுபவர்கள்தான் இருக்கிறார்கள். ஆனால், ஒழுக்கமாக இருக்க விரும்பும் எனக்கு தான் இத்தனை சோதனைகள் வருகிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x