Published : 26 Sep 2023 06:01 AM
Last Updated : 26 Sep 2023 06:01 AM
சென்னை: மின்சார நிலைக் கட்டணம், பீக்-ஹவர் கட்டணத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால், ரூ.7,000 கோடி அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், முதல்வரின் அறிவுறுத்தலை தொடர்ந்து, இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் இன்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
தமிழக அரசு கடந்த ஆண்டு செப்.10-ம் தேதி மின்கட்டணத்தை உயர்த்தியது. இதில், குறு, சிறு, நடுத்தர தொழில் (எம்எஸ்எம்இ) நிறுவனங்களுக்கு நிலைக் கட்டணம் ரூ.550 ஆக இருமடங்கு உயர்த்தப்பட்டது. அதேபோல, பீக் ஹவர் கட்டணமும் 25 சதவீதம் உயர்த்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட எம்எஸ்எம்இ நிறுவனங்கள் உள்ள நிலையில், இந்த கட்டண உயர்வால் தாங்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும், உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் இந்த நிறுவனங்கள் சார்பில் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை குறைக்க கோரி தமிழகம் முழுவதும் செப்.25-ம் தேதி (நேற்று) ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எம்எஸ்எம்இ நிறுவனங்கள் அறிவித்தன.
இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் சிறு தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண முறைகளை மாற்றியமைத்து சமீபத்தில் உத்தரவிட்டார்.
ஆனால், இதிலும் தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்று கூறி, எம்எஸ்எம்இ நிறுவனங்கள் திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால், உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்னை கிண்டியில் தமிழ்நாடு தொழில் துறை மின்நுகர்வோர் சங்கம் சார்பில் கவனஈர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து சென்னை மாவட்ட சிறு, குறுந்தொழில் சங்க ஒருங்கிணைப்பாளர் கே.சந்திரகுமார் கூறியதாவது:
தொழில் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்வதில் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன.
இந்த நிலையில், மின்கட்டண உயர்வால் இந்த நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதுகுறித்து, அரசிடம் பலமுறை முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. மேலும், அடிக்கடி உயர்த்தப்படும் மின்கட்டண உயர்வால் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன.
குறிப்பாக, தமிழ்நாடு மின்வாரியம் உயர்த்தியுள்ள 430 சதவீத நிலைக் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். பீக்-ஹவர் கட்டணம் 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. எனினும் இது பெரும் சுமையாக இருப்பதால், இதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் அதுபோல், 12 கிலோவாட் வரை மின்சார இணைப்பு பெற்றுள்ள எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு 3-பி அட்டவணைக்கு பதிலாக 3-ஏ என்ற அட்டவணை மூலம் மாதம்தோறும் மின்கட்டணம் வசூலிக்க வேண்டும். இதன்மூலம் உற்பத்தி செலவு குறையும். வெல்டிங் இணைப்புகளை 3-பி என்ற சிறப்பு அட்டவணையில் இருந்து 3-ஏ அட்டவணைக்கு மாற்ற வேண்டும்.
மேலும், பல்முனை ஆண்டு மின்கட்டண அட்டவணையை ரத்து செய்ய வேண்டும். 2 ஆண்டுகளுக்கு மின்கட்டணத்தை உயர்த்த கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் தற்போது (நேற்று) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் ரூ.7,000 கோடி அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல, கோவை மாவட்டத்தில் நடைபெற்ற கதவடைப்பு போராட்டத்தால் 50 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் நேற்று மூடப்பட்டன. ரூ.1,000 கோடிக்கு மேல் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்தனர். எம்எஸ்எம்இ நிறுவனங்கள் அதிகம் செயல்படும் கணபதி, சிட்கோ, இடையர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.
இதற்கிடையே, இப்பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு, குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, எம்எஸ்எம்இ நிறுவன உரிமையாளர்கள், பிரதிநிதிகளுடன் அமைச்சர் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT