Published : 26 Sep 2023 05:15 AM
Last Updated : 26 Sep 2023 05:15 AM

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு: திமுக பிரமுகர் உட்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை

முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 6 பேரை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லும் போலீஸார்.

திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக நிர்வாகி உட்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, 6 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த வி.துறையூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சேகர்(52). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர் கடந்த 2015 டிச.16-ம் தேதி சமயபுரம் பிரதான சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகே நின்றிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர்.

தேர்தல் முன்விரோதம்: இதுகுறித்து சமயபுரம் போலீஸார் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக வி.துறையூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஆச்சி குமார், இளையராஜா(47), திருச்சி புத்தூர் ஜான்சன் குமார்(49), இருங்களூர் நடராஜன்(58), சேலம்சங்ககிரி சரவணகுமார்(40), திருச்சி பிச்சாண்டார்கோவில் கனகராஜ்(41), துவாக்குடி மனோகர்(42), அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சுரேஷ்(30), ஜெயங்கொண்டம் ராஜி என்கிற செல்வம்(40), திருவையாறு மேலபுனவாசல் பால் எமர்சன் பிரசன்னா(28), கடலூர் காட்டு மன்னார்கோவில் உத்திரசோலை ஹரிகிருஷ்ணன்(41), கரூர் ராஜா, சமயபுரம் செந்தில்(42) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

கடந்த 2011-ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சேகர் போட்டியிட்டார். அவருக்கு எதிராக செயல்பட்ட ஆச்சிகுமாரின் அண்ணன் மகன்அம்பிகாபதி, தேர்தல் முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டார். அதற்கு பழிவாங்கும் விதமாகவும், ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும், கூலிப்படையினர் உதவியுடன் சேகர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை: திருச்சி மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்தவழக்கு விசாரணை நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் ஆஜராகி வாதாடினார். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி ஜெயக்குமார் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

இதில், குற்றம்சாட்டப்பட்ட இளையராஜா, ஜான்சன் குமார்,நடராஜன், கனகராஜ், ஹரிகிருஷ்ணன், செந்தில் ஆகிய 6 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜான்சன் குமார், திருச்சி மத்திய மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளராக உள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஆச்சிகுமார், ராஜா ஆகியோர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டனர். சரவணகுமார், மனோகர், சுரேஷ், ராஜி என்கிற செல்வம் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள திருவையாறு மேலபுனவாசல் பால் எமர்சன் பிரசன்னாவை போலீஸார் தேடி வருகின்றனர்.

மத்திய சிறையில் அடைப்பு: இதற்கிடையே, இந்த வழக்கில் தண்டனை பெற்ற 6 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x