Published : 26 Sep 2023 06:18 AM
Last Updated : 26 Sep 2023 06:18 AM
சென்னை: எம்ஆர்பி கோவிட் செவிலியர்களுக்கு மீண்டும் அரசுப் பணி வழங்க வேண்டுமென்ற உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி 3 நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம், சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று தொடங்கியது.
எம்ஆர்பி கோவிட் செவிலியர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் இந்த போராட்டத்தில் சங்கத்தின் தலைவர் எம்.விஜயலட்சுமி, துணைத் தலைவர் ஜி.உதயகுமார், செயலாளர் எஸ்.ராஜேஷ், இணைச் செயலாளர் டி.மதியரசு மற்றும் சுமார் 1,000 செவிலியர்கள் பங்கேற்றனர். இரவு 7 மணி அளவில் செவிலியர்கள் அனைவரும் கோரிக்கையை வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக சங்கத்தின் நிர்வாகிகள் கூறியதாவது: கரோனா பேரிடர் தொற்றுக் காலமான கடந்த 2020-ம் ஆண்டு 6,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் 300 மருத்துவர்கள் தற்காலிக முறையில் அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டனர். அதில் 3,000 செவிலியர்கள், 300 மருத்துவர்கள் நிரந்தரப்படுத்தப்பட்டு பணி மாற்றம் செய்யப்பட்டனர்.
அப்போது 3,300 காலி பணியிடம் மட்டுமே இருந்ததால், மீதமுள்ள 3,290 தற்காலிக செவிலியர்களுக்கு நிரந்தர தன்மையுடைய செவிலியராகப் பணி மாற்றம் செய்யவேண்டும் என்று அரசிடம் எங்கள் சங்கம் சார்பாக 2021-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி கோரிக்கை வைக்கப்பட்டது.
இக்கோரிக்கையை ஏற்று அரசு, கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்தது. ஆனால் எங்களுக்கு அரசு அளித்த வாக்குறுதியை மீறி கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி இரவில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 3 ஆண்டு பணி செய்த எங்களை பணிநீக்கம் செய்தது. அதே நேரம் மாவட்ட சுகாதார சங்கத்தின் மூலம் தற்காலிக மாற்றுப்பணி வழங்கப்படும் எனத் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அத்தகைய பணி ஏதும் வழங்கப்படவில்லை.
எனவே, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் தீர்ப்பின் அடிப்படையில் 6 வாரத்தில் மீண்டும் பணி வழங்க வேண்டுமென்ற உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து நடக்கவிருந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்றம் 3 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி செப்டம்பர் 25-ம் தேதி (இன்று) முதல் 27-ம் தேதி வரை (பகல் மற்றும் இரவு) உண்ணாவிரதபோராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எம்ஆர்பி கோவிட் செவிலியர்களுக்கு மீண்டும் அரசுப் பணி வழங்க வேண்டுமென்ற உயர் நீதிமன்ற உத்தரவைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT