Published : 26 Sep 2023 06:10 AM
Last Updated : 26 Sep 2023 06:10 AM
சென்னை: பொதுப்பணித் துறை மூலம் கட்டப்படும் கட்டிடங்களுக்கு பணிகள் தொடங்கும் முன்பே கட்டிட வரைபடம் உள்ளிட்ட அனுமதிகளைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தினார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித் துறை வளாகத்தில், துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கருணாநிதி நினைவகம், மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கம், பாரம்பரியக் கட்டிடங்களைப் புனரமைத்தல், சுகாதாரத் துறையின் கட்டிடப் பணிகள் மற்றும் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிதியத்தின் (ஜைகா) நிதியுதவி பெறும் மருத்துவ கட்டிடப் பணிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள், நபார்டு வங்கி உதவியுடன் கட்டப்படும் பள்ளிக் கட்டிடங்கள், நீதிமன்றக் கட்டிடப் பணிகள், நினைவகங்கள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அமைச்சர் வேலு பேசியதாவது: பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தையும் தரத்துடன் மேற்கொள்வதுடன், கட்டுமானப் பொருட்களின் ஆய்வகப் பரிசோதனைகள், களப் பரிசோதனை ஆவணங்கள், அறிக்கைகள் ஆகியவற்றை ஆய்வுக்குத் தயாராக வைத்திருக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகள் மற்றும் இதர முக்கிய அரசுக் கட்டிடங்களில் இயங்கி வரும் மின்தூக்கி, குளிர்சாதன வசதி மற்றும் இதர மின் வசதிகளை முறையாகப் பராமரிக்க வேண்டும்.
மின் பணிகளுக்கான ஒப்பந்தத்தை, சிவில் பணி ஒப்பந்தத்தின்போதே இறுதி செய்ய வேண்டும். நினைவக கட்டிடப் பணிகள் மற்றும் சிலை அமைக்கும் பணிகளுக்கான அறிவிப்புகளுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
தனியார் கட்டிடங்களுக்கு வழங்கப்படும் கட்டிட உறுதிச் சான்று குறித்த விவரங்களை அவ்வப்போது தெரிவிக்க வேண்டும். பொதுப்பணித் துறை மூலம் கட்டப்படும் கட்டிடங்களுக்கு, பணிகள் தொடங்கும் முன்பே கட்டிட வரைபட அனுமதி, சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவற்றைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமே நிரந்தரம் என்ற அடிப்படையில் அனைவரும் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
கூட்டத்தில், பொதுப்பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் கே.பி.சத்தியமூர்த்தி, அரசு சிறப்பு அலுவலர்ஆர்.விஸ்வநாத், சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் கே.ஆயிரத்தரசு ராஜசேகரன், திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் எ.வள்ளுவன், தலைமை கட்டிடக் கலைஞர் எம்.இளவேன்மாள் மற்றும் பொறியாளர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT