Published : 16 Jul 2014 09:33 AM
Last Updated : 16 Jul 2014 09:33 AM
சென்னையில் இருந்து திருத்தணி வரை செல்லும் நெடுஞ் சாலை பாடி, அம்பத்துார், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திரு வள்ளூர் வழியாக செல்கிறது. இச்சாலையில் நாளொன்றுக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக னங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் ஆக்கிரமிப்புகள் காரணமாக 60 அடி அகலம் கொண்ட இந்த சாலை, 40 அடியாக குறுகி விட்டது. இதனால், இச்சாலையில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இப்பிரச்சி னைக்கு தீர்வுகாணும் விதமாக, இச்சாலையை திருப்பதி வரை 250 அடி அகலமுள்ள நான்கு வழிப்பாதையாக விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக பாடி முதல் திருநின் றவூர் வரை ஒரு கட்டமாகவும், திருநின்றவூர் முதல் திருப்பதி வரை இரண்டாம் கட்டமாகவும் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணி களை தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இதில், திருநின்றவூர்-திருப்பதி இடையிலான சாலை விரிவாக்கப் பணிகள் ஏறத்தாழ 60 சதவீதம் நிறைவடைந்து விட்டன.
பாடி-திருநின்றவூர் இடையிலான 22 கி.மீ்ட்டர் துார சாலையை விரிவுபடுத்தினால் சாலையின் இரு புறங்களிலும் உள்ள கடைகள் மற்றும் கட்டிடங் கள் இடிபடும் என்று கூறி வியாபாரி கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சாலையை விரிவாக்கம் செய்ய போதிய நிலத்தை கையகப்படுத்த முடியாததால், பாடி-திருநின்றவூர் இடையிலான சாலை விரிவாக்கப் பணிகளை தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் கைவிட்டது. இதையடுத்து, தமிழக அரசு இச்சாலையை விரிவாக்க முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தார்.
தற்போது இந்த சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இப்பணி ஏதோ கடமைக்காக செய்யப் படுவது போல் அரைகுறையாக நடந்து வருகிறது. இதுகுறித்து, சமூக ஆர்வலர் சுப.செல்வராசன் கூறும்போது, “பாடி-திருநின்றவூர் இடையே மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை விரிவாக்கப் பணிகள் முறையான ஒருங்கிணைப்புடன் நடைபெறவில்லை. மேலும், 250 அடி அகலத்திற்கு சாலை விரிவாக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது 60 அடி அகலத்திற்கு மட்டுமே சாலை விரிவாக்கப்படுகிறது.
அப்பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப் பட்டுள்ள கடைகளை முழுவதுமாக அகற்றாமல் கண்துடைப்புக்காக ஒருசில கடைகளை அகற்றிவிட்டு சாலை அகலப் படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் அம்பத்தூர் ஒ.டி. பஸ் நிலையம் அருகிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது’’ என்றார்.
இதுகுறித்து, நெடுஞ்சாலை துறை பொறியாளர் ஒருவர் கூறும்போது, “பாடி-திருநின்றவூர் இடையிலான சாலை விரிவாக்கப் பணி திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. சாலையின் குறுக்கே உள்ள மின்கம்பங்கள் விரைவில் ஓரத்தில் மாற்றி அமைக்கப்படும். மேலும், குறுகலான பகுதியில் சாலை அகலப்படுத்தப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT