Published : 26 Sep 2023 06:04 AM
Last Updated : 26 Sep 2023 06:04 AM

பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரையாமல் கரை ஒதுங்கிய விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் நேற்று முன்தினம் கடலில் கரைக்கப்பட்டன. முழுவதுமாக கரையாமல் பட்டினப்பாக்கத்தில் கரை ஒதுங்கிய சிலைகளை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று பொக்லைன் உதவியுடன் கடலில் தள்ளி கரைத்தனர். படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் 20-க்கும் மேற்பட்ட சிலைகள் கரையாமல் கரை ஒதுக்கின. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர்பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பொது இடங்களில் நிறுவப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

இந்த சிலைகள்பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் சென்னை மாநகர கடலோரப் பகுதிகளான பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் கரைக்கப்பட்டன. இந்த சிலைகள் கரைக்கப்பட்ட பகுதியில் கடல் நீர் பச்சை நிறத்தில் மாறியுள்ளது. 20-க்கும் மேற்பட்ட சிலைகள் கரையாமல் கரை ஒதுங்கியுள்ளன.

இந்நிலையில் பட்டினப்பாக்கம் பகுதியை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று நேரில்ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் 4 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டாலும், அதிக அளவிலான (சுமார் 1300) சிலைகள் பட்டினப்பாக்கத்தில் தான் கரைக்கப்பட்டன. அவற்றில் சுமார் 50 சிலைகள் கரை ஒதுங்கின. 20 பெரிய சிலைகள் கடலுக்குள் செல்லாமல் தடுமாறின.

பெரிய சிலைகளை மீண்டும் கடலில் கரைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரையாமல் கரைஒதுங்கும் கட்டைகள் போன்றவை தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன. 140 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மீனவ தன்னார்வலர்களுடன் இப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

ஏற்கெனவே இப்பகுதியில் கட்டைகள், பூக்கள் உள்ளிட்ட 40 டன் கழிவுகளை அகற்றி இருக்கிறோம். கடல் எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொள்ளாது. சில சிலைகள் கரையாமல் கரை ஒதுங்குவது வழக்கமானது.

வரும் காலங்களில் சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத விநாயகர் சிலைகளைச் செய்யுமாறு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x