Last Updated : 26 Sep, 2023 04:04 AM

 

Published : 26 Sep 2023 04:04 AM
Last Updated : 26 Sep 2023 04:04 AM

அதிமுகவுடனான கூட்டணி முறிவு: மதுரையில் பட்டாசு வெடித்து கொண்டாடிய பாஜகவினர்

மதுரை: கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதை மதுரையில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

தேசிய அளவில் பாஜக தலை மையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இருந்தது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தலைமை வகித்து வந்தது. மதுரை உசிலம்பட்டியில் நடைபயணம் மேற் கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் அண்ணா - பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மோதல் குறித்து பேசினார்.

இதையடுத்து அண்ணா குறித்து அண்ணாமலை அவ தூறு பரப்பியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிமுக 2-ம் கட்டத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு அண்ணாமலை காரசாரமாக பதிலடி கொடுத்தார். இந்நிலையில், பாஜக உடனான கூட்டணியில் இருந்து விலக நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

பாஜக கூட்டணியில் அதிமுக விலகியது தொடர்பாக கட்சியின் தேசிய தலைமைதான் முடிவெடுக்கும் என தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதற்கிடையே பாஜக கூட்டணி யில் இருந்து விலகியதை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

மதுரை மாவட்ட அதிமுக செயலாளர்கள் சென்னையில் இருப்பதால் நிர்வாகிகள் நேற்று பட்டாசு வெடிக்கவில்லை. அதே நேரத்தில் கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியதை மதுரையில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதற்காக மதுரை மாநகர் மாவட்ட பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் பட்டாசுகளுடன் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் இடத்தில் நேற்றிரவு திடீரென கூடினர்.

அப்போது மகா சுசீந்திரன் பேசுகையில், கூட்டணியிலிருந்து அதிமுக விலகியதை பாஜகவினர் வரவேற்கின்றனர். மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

அதிமுகவினர் ஊழல்களை வீடு வீடாக கொண்டுசெல்ல வேண்டும். கட்சி மேலிடத்தில் இருந்து இன்னும் அனுமதி கிடைக்காததால் பட்டாசு வெடிக்க வேண்டாம் என்றார். பட்டாசுகளுடன் வந்த நிலையில் வெடிக்க வேண்டாம் என மாவட்ட தலைவர் அறிவித்ததை கேட்டு நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.

மகா சுசீந்திரன் அங்கிருந்து சென்றதும் பாஜக நிர்வாகிகள் ஏற்கெனவே கொண்டு வந்திருந்த பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர். அப்போது ‘பீடை ஒழிந்தது, பிணி கழன்றது, இனி தமிழகத்தில் பாஜக ஒளி மலர்கிறது, அதி முகவுக்கு குட் பை’ என்று முழக்கம் எழுப்பினர்.

இதில் மாவட்ட துணை தலைவர்கள் சகாதேவன், சதீஷ் குமார், பொதுச்செயலாளர் ராஜ் குமார், மாவட்ட செயலாளர்கள் சுப்பா நாகுலு, கிருஷ்ணன், தனலட்சுமி, பொருளாளர் நவீன் அரசு, இணைப் பொருளாளர் சத்தியம் செந்தில்குமார், ஊடகப் பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன், மண்டல் தலைவர் முரளிதரன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x