Published : 26 Sep 2023 04:06 AM
Last Updated : 26 Sep 2023 04:06 AM
வேலூர்: அனங்காநல்லூர்-கூத்தம்பாக்கம் இடையே பாலாற்றில் மணல் குவாரி அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டத்தில், ‘ஒரு பிடி மணலையும் எடுக்க விட மாட்டோம்’ என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தங்களது எதிர்ப்பையும் மனுக்களாக பதிவு செய்து அதிகாரிகளிடம் அளித்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டத்துக்கு உட்பட்ட அனங்காநல்லூர், கூத்தம்பாக்கம் கிராமங்களுக்கு இடையிலான பாலாற்றில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறை சார்பில் புதிதாக மணல் குவாரி அமைக்கப்படவுள்ளது. 11.70 ஹெக்டேர் பரப்பளவில் அமையவுள்ள மணல் குவாரிக்கு அனங்காநல்லூர், கூத்தம்பாக்கம், அகரம்சேரி, கொத்தகுப்பம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பள்ளிகொண்டா அடுத்த அகரம் சேரி கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மணல் குவாரி அமைப்பது தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.
குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன், வேலூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் ரவிச் சந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மணல் குவாரி அமையவுள்ள இடம் குறித்தும், அது தொடர்பான அரசின் அறிக்கை தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
அதில், தமிழ்நாடு சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேசும் போது, ‘‘தமிழ்நாடு கனிமவளம், நீர் வளத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே மணல் குவாரி அமைப்பதற்கான 45 ஆவணங்களில் 35 வகையான ஆவணங்களை மறைத்து குவாரி தொடங்க திட்டமிட்டு வருகிறார்கள்.
குவாரி அமையவுள்ள இடத்தில் இருந்த 500 மீட்டர் தொலைவுக்குள் குடியிருப்புகள், நீர்த்தேக்க கட்டுமானங்கள் இருக்கக்கூடாது என்ற விதிகள் உள்ளன. அதை மறைத்து கிராம நிர்வாக அலுவலர் மூலம் அறிக்கை பெற்றுள்ளனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். 300 மீட்டருக்குள் குடியிருப்புகளும், 500 மீட்டருக்குள் 5 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளும் நீர்வழி கால்வாய்கள் உள்ளன.
மணல் குவாரி அமையஉள்ள இடத்தில் நிலத்தடி நீரின் கடினத் தன்மை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருக்கிறது. அப்படி இருக்கும் போது அதை மறைத்து குவாரி அமைக்க முயற்சிக்கிறார்கள். மணல் குவாரி அமைத்து 20 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி மணல் எடுத்து விட்டால் பாலாற்றில் இருந்து எப்படி ஏரிகளுக்கு கால்வாய் மூலம் நீர்பாசனம் கிடைக்கும்.
வெளி நாடுகளில் இருந்து 15 லட்சம் டன் மணலை இறக்குமதி செய்தால் தமிழகத்துல் எந்த ஆற்றில் இருந்தும் மணலை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. கிராமப்புற சாலைகளில் 10 டன், மாவட்ட சாலைகளில் 28 டன், தேசிய நெடுஞ்சாலைகளில் 48 டன் எடைகொண்ட லாரி செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், 28 டன்னுக்கும் அதிகமான டிப்பர் லாரியை எப்படி கிராமப்புற சாலைகளில் அனுமதிக்கிறார்கள். ஒவ்வொரு மணல் குவாரி அமைக்கப்படும் இடத்திலும் மரங்களை நட வேண்டும் என்பது விதிகளில் உள்ளன. இதுவரை எந்த குவாரிகளிலும் மரங்கள் நட்ட வரலாறு இல்லை. யாரோ கொள்ளையடித்து செல்ல அனங்காநல்லூர், கூத்தம்பாக்கம் மணல் வேண்டாம்’’ என்றார்.
சாந்த குமார் பேசும் போது, "அகரம்சேரி பாலாற்றில் பாலம் கட்டுவதாக அரசு உறுதியளித்துள்ளது. அப்படி இருக்கும்போது மணல் குவாரி அமைக்கக்கூடாது. கூத்தம்பாக்கம், அகரம் சேரி, அனங்காநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் 24 ஆயிரம் குடும்பங்களின் நலன் கருதி மணல் குவாரி வேண்டாம்" என்றார்.
குமரவேல் பேசும் போது, "ஏற்கெனவே, மணல் குவாரி அமைத்து அதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அரசு அதிகாரிகள் என்ன ஆனார்கள்? என்பதையும் எச்சரிக்க விரும்புகிறேன். ஏற்கெனவே, சின்னசேரி மற்றும் சின்னதோட்டாளத்தில் மணல் குவாரி அமைத்து 25 அடி ஆழத்துக்கு மணல் எடுத்துவிட்டார்கள். இப்போது கூத்தம்பாக்கத்தில் தொடங்கி மாதனூர் வரை மணல் எடுத்துவிடுவீர்கள். பாலாற்றில் ஒரு பிடி மணலையும் எடுக்க விடமாட்டோம்" என்றார்.
இவ்வாறு நடந்த கூட்டத்தில் பாலாற்றில் மணல் அள்ளக்கூடாது என்று பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து மனுக்களையும் அளித்தனர். தொடர்ந்து, வரும் அக்.2-ம் தேதி நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்திலும் அனங்காநல்லூர் உள்ளிட்ட அனைத்து கிராமங்களில் மணல் குவாரிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.
கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்ற திருமண மண்டபத்துக்கு பள்ளிகொண்டா காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் மேற் பார்வையில் 30-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT