Published : 25 Sep 2023 09:46 PM
Last Updated : 25 Sep 2023 09:46 PM
மதுரை: ‘‘எங்களை மதிக்காத கட்சி எங்களுக்குத் தேவையில்லை, எங்கள் நீண்டகால விருப்பத்தை கட்சித் தலைமை செயல்படுத்தியிருக்கிறது’’ என்று பாஜக கூட்டணி முறிவு குறித்து அதிமுக கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் செயல்பாட்டை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாஜக இயக்கி வந்ததாகவும், அதன் கட்டுபாட்டில் வைத்திருந்ததாகவும் கூறப்பட்டது. அதனை நிரூபிக்கும் வகையில், அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரை டெல்லிக்கு அடிக்கடி சென்று, தங்கள் உள்கட்சி பிரச்சினையை பற்றி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நாட்டா ஆகியோரை சந்தித்து முறையிட்டனர். பாஜக மேலிடத்தின் ஆதரவு தங்கள் அணிக்கு கிடைக்காதா என இரு தரப்பினரும் தவம் கிடக்கும் நிலையில் இருந்தது அக்கட்சி தொண்டர்களுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. அதனால், பாஜக கூட்டணியில் அதிமுக தொண்டர்கள் பிடிப்பும், விருப்பமும் இல்லாமலே இதுவரை பணியாற்றினர்.
ஜெயலலிதா காலத்தில் வெற்றியோ, தோல்வியோ கூட்டணிக்காக யாருடனும் சமரசம் செய்து கொள்ளாமலும் அடிபணியாமலும் கட்சித் தலைமை கம்பீரமாக செயல்பட்ட நிலையில் ஓபிஎஸ் - இபிஎஸ் காலத்தில் அதிமுக கட்சியை காப்பாற்றவும், தங்கள் இருப்பை தக்கவைக்கவும் பாஜகவிடம் அடிபணிந்து கிடந்ததாக அக்கட்சி தொண்டர்கள் மனம் புழுங்கினர்.
ஜெயலலிதாவின் செல்வாக்கை மீறி அதிமுக தலைமையையும், அதன் தலைவர்களையும் கூட்டணியில் இருந்த கட்சிகள் எளிதாக விமர்சனம் செய்துவிட்டு கடந்து சென்றுவிட முடியாது. ஆனால், சமீப காலமாக கூட்டணியில் இருந்து கொண்டே பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுக தலைவர்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா முதலானவர்களை விமர்சனம் செய்த நிலையில், அதனை தட்டிக் கேட்க கூட கட்சித் தலைமை தயங்கியதால் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலங்கிப்போய் நின்றனர்.
ஏற்கெனவே கடந்த மக்களவைத் தேர்தல், சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் பல்வேறு தரப்பு அதிருப்தியையும் அதிமுக சம்பாதிக்க வேண்டியதானது. அதனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பாஜகவுடன் அதிமுக தலைமை ஒவ்வொரு முறையும் கூட்டணி அமைக்கும்போது, கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு விருப்பமில்லாமல் தேர்தலில் பணியாற்றினர். அதனால், தேர்தல்களில் அந்த இரு கட்சிகளின் வெற்றியையும், வாக்கு வங்கியையும் பாதித்தது.
இந்நிலையில், சென்னையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவின் இந்த முடிவை அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்று தங்களின் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறியதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
ராஜா சீனிவாசன்(அதிமுக) கூறுகையில், ‘‘தொண்டர்களை வைத்து அதிமுக கட்சி உள்ளது. தொண்டர்களுடைய நீண்டகால விருப்பத்தை கட்சித் தலைமை குறிப்பறிந்து கட்சி பொதுச் செயலாளர் கே.பழனிசாமி இந்த முடிவை எடுத்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மை மக்கள் வாக்குகள் விழாது. அதற்கு நானே சிறந்த உதாரணம். அதிமுக மாநகராட்சி கவுன்சிலராக 15 ஆண்டுகள் இருந்துள்ளேன். அப்போது என்னுடைய வார்டில் இருந்த 1,500 சிறுபான்மை வாக்குகள் எனக்கு விழுந்தது. அதனால், என்னுடைய வெற்றி சுலபமானது. ஆனால், கடந்த மாநகராட்சி தேர்தலில் நான் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்து அக்கட்சி சார்பில் போட்டியிட்டேன். 800 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தேன். அதற்கு காரணம், என்னுடைய வார்டில் தொடர்ச்சியாக எனக்கு விழுந்த சிறுபான்மை மக்கள் வாக்குகள் எனக்கு விழவில்லை’’ என்றார்.
மதுரை மாநகர அதிமுக செயலர் மானகிரி அசோகன் கூறுகையில், ‘‘பாஜகவுடன் கூட்டணி முறித்துக் கொண்டதால் தொண்டர்கள் எழுச்சி பெற்றுள்ளனர். இனிமேல் உற்சாகத்துடன் தேர்தல் பணி செய்வோம். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எங்களது கட்சியின் முன்னாள், இன்னாள் தலைவர்களுக்கு எதிராக கடந்த ஓராண்டாக தொடர்ந்து பேசுவதை பாஜக தலைமை கண்டிக்கவில்லை. வேடிக்கை பார்த்தது. குறைந்தபட்சம் அண்ணாமலையை மாற்றியிருந்தால் கூட, அக்கட்சியின் தலைமை மீது நம்பிக்கை வந்திருக்கும். அதுவும் செய்யவில்லை. எங்களுக்கு எம்பி தேர்தலை விட, எம்எல்ஏ தேர்தல் முக்கியம்.
அதிமுக (1972) பாஜகவைவிட(1980) மூத்த கட்சி. எங்களது தலைவி ஜெயலலிதா மோடியையே வீட்டுக்கு வரவழைத்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியை 9 நாளில் தூக்கி எறிந்தவர். அப்படி பலம் வாய்ந்த கட்சி அதிமுக. வழக்கு போட்டால் எதிர்கொள்ளும் என தலைவர்கள் துணிந்துவிட்டனர். அண்ணாமலையால் எவ்வளவு சதவீதம் ஓட்டுகள் கிடைக்கும் என பார்க்கலாம். பாஜக கூட்டணியால் பொதுமக்கள் வாக்குகளை முன்புபோல் அதிமுகவால் பெற முடியவில்லை. மேலும், வார்டுகளில் பாஜக அமைப்பு ரீதியான நிர்வாகிகள் கிடையாது. எங்களது முகுகில் இதுவரை சவாரி செய்து வந்த பாஜகவின் பலம் இனி என்ன என்பது தெரிந்துவிடும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT