Published : 25 Sep 2023 05:12 PM
Last Updated : 25 Sep 2023 05:12 PM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி உபரி நீர் இன்று (செப். 25) பிற்பகல் 2 மணியில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் தென்பெண்ணையாறு கரையோரங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து விநாடிக்கு 640 கனஅடி மற்றும் பாம்பாறு அணையில் இருந்து விநாடிக்கு 560 கனஅடி தண்ணீர் திறந்துவிட்டுள்ளதால் தென்பெண்ணையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், தென்பெண்ணையாறு நீர் பிடிப்பு பகுதியில் பெய்துள்ள கன மழையால், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் அணை பகுதியில் 28 மி.மீ., மழை பெய்துள்ளது.
சாத்தனூர் அணைக்கு இன்று(செப். 25) காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 2,010 கனஅடி நீர் வரத்து இருந்தது. பின்னர், நீர்வரத்து அதிகரிப்பதும் மற்றும் குறைவதும் என்ற நிலையில் இருந்தது. இதனால், 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம், இன்று பிற்பகல் 2 மணிக்கு 117 அடியை எட்டியது. இதையடுத்து, அணையில் இருந்து மின் உற்பத்திக்கான 2 மதகு வழியாக ஆயிரம் கனஅடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் 6875 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளன.
சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து தொடர்வதால், அணையில் இருந்து தண்ணீர் திறப்பது அதிகரிக்கப்படும் என நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் அறிவழகன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, “சாத்தனூர் அணையில் விதிகளின்படி, நவம்பர் 30-ம் தேதி வரை 117 அடிக்கு தண்ணீரை தேக்கி வைத்து கொள்ளலாம். 117 அடி நிரம்பியதும், அணைக்கு வரும் தண்ணீர் முழுமையாக, அணையின் உள் பகுதியில் உள்ள 11 கண் மதகு வழியாக வெளியேற்றப்படும். முதற்கட்டமாக, மின் உற்பத்திக்கான நீர் வழிந்தோடி பாதை வழியாக இன்று பிற்பகல் 2 மணியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
நீர்வரத்து அதிகரித்தால், அணையில் இருந்து அடுத்தக்கட்டமாக விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படும். மேலும் அதிகரிக்கப்பட்டு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீரை, தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்படும்.
எனவே, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் தென்பெண்ணையாறு கரையோரங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆற்றின் வெள்ள நீர் புகுந்துவிடும் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வருவாய் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஆற்றை கடக்கவும், ஆற்றில் குளிக்கவும் வேண்டாம்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT