Published : 25 Sep 2023 04:59 PM
Last Updated : 25 Sep 2023 04:59 PM
சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை எதிரே மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் நவீனசுரங்கப்பாதை கட்டப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படவில்லை. இதனால், பொலிவை இழந்து சுகாதாரமற்ற நிலையில்காணப்படும் சுரங்கப்பாதை, இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே பயணிகள் எளிதாக கடந்து செல்வதற்காக லிஃப்ட், எஸ்கலேட்டர் வசதிகளுடன் சுரங்கப்பாதைகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் அமைத்துள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையம், பூங்கா புறநகர் மின்சார ரயில் நிலையம், ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை ஆகியவற்றை இந்த சுரங்கப்பாதைகள் இணைக்கின்றன. இதன்காரணமாக, பொதுமக்கள் நேரடியாக சாலையை கடப்பது வெகுவாக குறைந்துள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்பவர்கள் சுரங்கப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகளுக்கு இந்த சுரங்கப்பாதை மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் பிரதான நுழைவுவாயில் அருகே முழு உடல் பரிசோதனை மையம் எதிரிலும் இதேபோல எஸ்கலேட்டர் வசதியுடன் கூடிய நவீன சுரங்கப்பாதையை மெட்ரோ ரயில் நிர்வாகம் அமைத்துள்ளது. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, தெற்கு ரயில்வே அலுவலகம், ஈவ்னிங் பஜார் சாலை, மின்ட் சாலை ஆகியவற்றை இணைக்கும் இந்த சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன. ஆனால், இன்னும் திறக்கப்படவில்லை.
சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே ஏற்கெனவே சுரங்கப்பாதை வசதி இருந்தாலும், முழு உடல் பரிசோதனை மையத்தின் எதிரேதான் உணவகங்கள், ஜூஸ் கடைகள், டீ கடைகள், செல்போன் ரீசார்ஜ் உள்ளிட்ட அனைத்து கடைகளும் உள்ளன.
மருத்துவமனைக்கு வரும் ஆயிரக்கணக்கான நோயாளிகள், அவர்களது உறவினர்கள் இந்த சாலையை கடந்துதான் கடைகளுக்கு சென்று வருகின்றனர். சில நோயாளிகள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.
தவிர, இந்த பகுதியில்தான் சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி), மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்கள் விடுதி, செவிலியர் பயிற்சி பள்ளி, அவர்களுக்கான விடுதி ஆகியவை அமைந்துள்ளன. மருத்துவமனைக்கு வந்து செல்லும் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், செவிலியர் பயிற்சி மாணவர்கள் அனைவரும் இந்த சாலையை கடந்துதான் சென்று வருகின்றனர்.
சில நேரம், சாலையை கடக்கும்போது விபத்துகளும் நடக்கின்றன. அது மட்டுமின்றி, பொதுமக்கள் சாலையை கடக்கும்போதும், எதிரே உள்ள ஈவ்னிங் பஜார் சாலையில் இருந்து வாகனங்கள் சாலையை கடக்கும்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுபோன்ற நேரங்களில் நோயாளிகளுடன் வரும் ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனைக்குள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க, கட்டி முடித்தும் திறக்கப்படாத சுரங்கப்பாதை சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது. அதிக செலவில்அமைக்கப்பட்ட ஸ்டீல் தடுப்பு கம்பிகள், அருகே இருப்பவர்கள் துணி காயப்போட மட்டுமே பயன்படுகிறது. இரவு நேரங்களில் மது அருந்துவது போன்ற பல்வேறு விரும்பத்தகாத செயல்கள் இந்த சுரங்கப்பாதையில் நடைபெறுகின்றன. அதனால், இரவு நேரத்தில் பொதுமக்கள் இப்பகுதியை அச்சத்துடனேயே கடக்க வேண்டி உள்ளது.
எனவே, சுரங்கப்பாதையை விரைவில் திறந்து, அதன் இருபுறமும் 24 மணி நேரமும்போலீஸ் கண்காணிப்பை ஏற்படுத்த வேண்டும். மருத்துவமனைக்கு வரும் ஆயிரக்கணக்கான நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதுபற்றி மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘இந்த சுரங்கப்பாதையை விரைவில் திறந்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT