Published : 25 Sep 2023 04:50 PM
Last Updated : 25 Sep 2023 04:50 PM
சென்னை: காக்களூர் - அரண்வாயல்குப்பம் நெடுஞ்சாலை சேதமடைந்து ஒத்தையடி பாதை போல மாறியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
சென்னை–திருவள்ளூர் ரயில் வழித்தடத்தில் உள்ளது புட்லூர் ரயில் நிலையம். இதன் அருகில்அமைந்துள்ளது காக்களூர் தொழிற்பேட்டை. இந்த தொழிற்பேட்டை வழியாக, சென்னை–திருப்பதி தேசியநெடுஞ்சாலையும், சென்னை–திருமழிசை – திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், அரண்வாயல்குப்பம் - காக்களூர் இடையே மாநில நெடுஞ்சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலை வழியாக காக்களூர் தொழிற்பேட்டைக்கு வரும் கனரக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், இந்த சாலை பராமரிப்பின்றி ஒத்தையடி பாதையாக காணப்படுகிறது.
இதுகுறித்து காக்களூர் பகுதியை சேர்ந்த கே.ராகவேந்திர பட் என்பவர் கூறியதாவது: காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் ஏராளமானோர் பணிபுரிகின்றனர். இவர்களில் சிலர் ரயில் மூலமாகவும், பலர் வாகனங்கள் மூலமாகவும் தினமும் வேலைக்கு வந்து செல்கின்றனர்.
இதுதவிர, தொழிற்சாலைகளுக்கு உற்பத்தி செய்ய தேவைப்படும் மூலப்பொருட்கள் பல்வேறுமாநிலங்களில் இருந்து கன்டெய்னர் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. அதேபோல, தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களும் லாரிகள் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த லாரிகள் இதுவரை திருவள்ளூர் வழியாக வந்தன. இந்த நிலையில், புட்லூர் ரயில் நிலையத்தில் கடவுப் பாதை இருக்கும் இடத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. ஆனால், இந்த பாலம் இதுவரை அதிகாரப்பூர்வமாக திறக்கப்படவில்லை. ஆனால், பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
திருமழிசையில் இருந்து காக்களூருக்கு வரும் கன்டெய்னர் லாரிகள் திருவள்ளூர் வழியாக சென்றால் 7 கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டும் என்பதால் அந்த லாரிகளும் இப்பாலம் வழியாக வருகின்றன. ஆனால், அதற்கு ஏற்ற வகையில், அரண்வாயல்குப்பம் - காக்களூர் நெடுஞ்சாலை அகலமாக இல்லை. 30 அடி அகலம் உள்ள இச்சாலை பல இடங்களில் சேதமடைந்து, குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால், இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் வரும்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையின் ஓரத்தில் ஒதுங்கி நிற்கக்கூட இடம் இல்லாமல் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும், இந்த சாலையின் இருபுறமும் பல இடங்களில் முட்புதர்கள் மண்டி புதர் போல் காணப்படுகிறது
பாலத்தின் மீதும் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால், இரவு நேரத்தில் பாலத்தின் மீது பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் என்ற அச்சத்துடனேயே செல்ல வேண்டி உள்ளது.
புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கும், காக்களூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கும் விசேஷ நாட்களில் அண்டை மாவட்டங்கள் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அந்த நாட்களில், அவர்களது வாகனங்களும் இப்பகுதியில் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, பொதுமக்கள் வசதிக்காக அரண்வாயல்குப்பம் – காக்களூர் நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். அதேபோல, கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலத்தையும் அதிகாரப்பூர்வமாக மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து மின்விளக்குகள் எரிவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘புட்லூர் ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் சில இறுதிக்கட்ட பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பாலத்தை திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பாலம் திறக்கப்பட்டதும் சாலை விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT