Published : 25 Sep 2023 03:51 AM
Last Updated : 25 Sep 2023 03:51 AM
சென்னை: போக்குவரத்து வாகனங்களுக்கான தகுதிச் சான்று வழங்க தனியார் பங்களிப்புடன் தானியங்கி சோதனை நிலையங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலர் பி.அமுதா வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: போக்குவரத்து வாகனங்களுக்கான தகுதிச் சான்றை 2024-ம் ஆண்டு அக்.1-ம் தேதி முதல் தானியங்கி சோதனை நிலையம் மூலமாக மட்டுமே பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், போக்குவரத்து வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்க தனியார் பங்களிப்பின் மூலமாக தானியங்கி சோதனை நிலையங்கள் அமைக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இதையொட்டி, சோதனை நிலையங்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள சில பரிந்துரைகளை முன்வைத்து, போக்குவரத்து ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதன்படி, செங்குன்றம், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், வேலூர், திண்டிவனம், திண்டுக்கல், மதுரை தெற்கு உள்ளிட்ட 18 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தனியார் பங்களிப்புடன் தானியங்கி வாகன சோதனை நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
18 நிலையங்கள்: இதற்கான டெண்டர், கட்டுமானம் உள்ளிட்ட பணிகளை தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி நிறுவனம் மேற்கொண்டு, 2024-ம் ஆண்டு செப்.30-ம் தேதிக்குள் 18 நிலையங்களையும் அமைப்பதற்கு அரசு அனுமதியளிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தானியங்கி சோதனை நிலையங்களுக்கான வரன்முறைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி, நிலையத்தில் 12 ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும். மேலும், 15 ஆண்டுகளுக்கு மேலான இருசக்கர வாகனங்களுக்கு தகுதிச் சான்று பெற ரூ.650, 3 சக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கு ரூ.850, கனரக வாகனங்களுக்கு ரூ.1,250 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதிச்சான்று காலாவதியான பிறகான ஒவ்வொரு நாளுக்கும் தலா ரூ.50 கூடுதலாக வசூலிக்கப்படும்.
இந்த நிலையங்களில் பிரேக் அமைப்பு, முகப்பு விளக்கு, பேட்டரி, டயர், பிரதிபலிப்பான் உள்ளிட்ட சுமார் 40 சோதனைக்கு வாகனங்கள் உட்படுத்தப்படும். இதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் தகுதிச் சான்று வழங்கப்படமாட்டாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT