Published : 25 Sep 2023 05:58 AM
Last Updated : 25 Sep 2023 05:58 AM

நாகப்பட்டினம் மீனவர்கள் 4 பேரை தாக்கி ரூ.4 லட்சம் பொருட்கள் கொள்ளை: இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்குதலுக்கு உள்ளான மீனவர்

நாகப்பட்டினம்: விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாகை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்கொள்ளையர்கள் கடுமையாக தாக்கி ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சபாபதி. இவருக்கு சொந்தமான விசைப்படகில் இவருடைய மகன்கள் பிரதீப்(29), பிரகாஷ்(28), பிரவீன்(26), திருமுருகன்(24) ஆகிய 4 பேர், செப்.21-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 10 நாட்டிக்கல் கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, இந்திய எல்லைக்குள் அத்துமீறி 2 படகுகளில் நுழைந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 6 பேர், சபாபதியின் விசைப்படகில் ஏறினர். அவர்கள் தமிழக மீனவர்களை கத்தி, கட்டை உள்ளிட்டவற்றால் தாக்கி, ரூ.4 லட்சம் மதிப்பிலான 500 கிலோ வலை, மீன்கள், ஜிபிஎஸ் கருவி, 4 செல்போன்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

பின்னர், படுகாயங்களுடன் செருதூர் மீன் இறங்குதளத்துக்கு வந்துசேர்ந்த மீனவர்களை சக மீனவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு 4 மீனவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, தொழில் செய்யமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே, இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x