Published : 24 Sep 2023 11:15 AM
Last Updated : 24 Sep 2023 11:15 AM

‘வந்தே பாரத்’ ரயில் கோவில்பட்டியில் நிற்காதா? - வரிந்துகட்டும் அரசியல் கட்சிகள்

கோவில்பட்டி: சென்னை - திருநெல்வேலி இடையே ‘வந்தே பாரத்’ ரயில் இன்று (24-ம் தேதி) முதல் இயங்க உள்ளது.

இந்த ரயில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தைத் தொடர்ந்து விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம், சென்னை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ கிரேடு அந்தஸ்தில் உள்ள கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தம் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளதால், இப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல வேண்டும் என, கனிமொழி எம்.பி., கடம்பூர் செ.ராஜு எம்.எல்.ஏ ஆகியோர் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளனர். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில், “கோவில்பட்டி ரயில் நிலையம் ஆண்டுக்கு சுமார் ரூ.30 கோடி வரை வருமானம் ஈட்டித் தரும் ‘ஏ’ கிரேடு அந்தஸ்தில் உள்ளது.

பல்வேறு சிறப்புகளையும், வணிக போக்குவரத்து மையமாகவும் திகழும் கோவில்பட்டியில் ‘வந்தே பாரத்’ ரயில் நின்று செல்ல மத்திய அரசும், மத்திய ரயில்வே நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் கே.சீனிவாசன் தலைமையில் அக்கட்சியினர் நேற்று காலை கோவில்பட்டி ரயில் நிலையம் முன்பு திரண்டு, ‘வந்தே பாரத்’ ரயில் நின்று செல்ல வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் நிலைய கண்காணிப்பாளர் கி.பால முருகன், நிலைய அதிகாரி முகேஷ் குமார் ஆகியோரிடம் அளித்த மனுவில், ‘‘தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய 3 மாவட்டங்களின் மையப் பகுதியாக கோவில்பட்டி நகரம் உள்ளது.

‘வந்தே பாரத்’ ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் அதன் தலைவர் க.தமிழரசன் தலைமையில் கோவில்பட்டி ரயில் நிலைய அதிகாரி அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேமுதிக, மதிமுக: கோவில்பட்டி கோட்ட தலைமை தபால் நிலையத்தில் இருந்து தேமுதிக மாவட்டச் செயலாளர் சுரேஷ் தலைமையில் அக்கட்சியினர் தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் மற்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு ‘வந்தே பாரத்’ ரயில் நின்று செல்ல வலியுறுத்தி கடிதம் அனுப்பினர். நாளை (25-ம் தேதி) மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, டெல்லி - கன்னியாகுமரி (வாரம் 2 நாட்கள்), சென்னை - கன்னியாகுமரி (தினமும்), நாகர்கோவில் - சென்னை (வெள்ளி மட்டும்), கன்னியாகுமரி - ராமேசுவரம் (வாரம் 3 நாட்கள்), செங்கோட்டை - தாம்பரம் (வாரம் 3 நாட்கள்) ஆகிய ரயில்களும் கோவில்பட்டியில் நின்று செல்வதில்லை. இந்நிலையில் ‘வந்தே பாரத்’ ரயிலும் கோவில்பட்டியில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x