Published : 24 Sep 2023 04:18 AM
Last Updated : 24 Sep 2023 04:18 AM

தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்க பல்கலைக்கழகங்கள் துணையாக இருக்கும்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி

சென்னை கிண்டி ராஜ்பவன், பாரதியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற ஆளுநரின் ‘எண்ணித் துணிக – தமிழ்ச் சான்றோருடனான கலந்துரையாடல்’ தொடர் நிகழ்ச்சியின் 10-ம் பகுதியில், பன்னிரு திருமுறையை தமிழில் இருந்து மலையாளத்தில் மொழி பெயர்த்தவர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டி கவுரவித்தார்.

சென்னை: தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்க பல்கலைக்கழகங்கள் துணையாக இருக்கும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ் அறிஞர்களுடன் ஆளுநர் ரவி நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: மொழிதான் மக்களின் ஆன்மா. தமிழ் மொழி குறித்து நான் அறிந்தபோது, அது எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்பதை புரிந்துகொண்டேன்.

தமிழில் `அறம்' என்ற சொல்லுக்கு இணையான மொழிபெயர்ப்பை, எந்த ஐரோப்பிய மொழியிலும் நான் கண்டதில்லை. இந்திய அளவில் தமிழுக்கு இணையாக பழமையான மொழியாக சம்ஸ்கிருதம் மட்டுமே உள்ளது. இத்தகைய பழமையான மொழியின் இலக்கியங்களில் `உலக' என்ற வார்த்தை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகள் கொண்ட தமிழ் மொழியின் சிறப்பை, உலகெங்கும் கொண்டு சேர்க்க வேண்டும். இந்தப்பணியை மொழிபெயர்ப்பாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். அதேநேரம், மொழிபெயர்ப்புப் பணிகளை விரிவான முறையில் மேற்கொள்ள வேண்டும்.

தற்போது பல்வேறு மாநிலங்களில் உள்ளவர்களும் தமிழ் மொழியைக் கற்று வருகின்றனர். அவர்களுக்கான தேர்வு விடுமுறையின்போது தமிழகத்தை சுற்றிப்பார்த்து, இங்கிருக்கும் விஷயங்களை நேரில் அறிந்து கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.

இலக்கிய மொழிபெயர்ப்புப் பணிகளுக்கு பல்கலைக்கழகங்கள் உறுதுணையாக இருக்கும். மொழிபெயர்ப்பாளர்களை ஊக்கப்படுத்தி, இலக்கியங்களை உலக அளவில் கொண்டு சேர்ப்போம். இவ்வாறு ஆளுநர் பேசினார்.

முன்னதாக, திருமுறைகளை மொழிபெயர்த்தவர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கவுரவித்தார். நிகழ்வில், தேவாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மறவன்புலவு சச்சிதானந்தன், மயிலை திருவள்ளுவர் தமிழ்ச் சங்கச் செயலர் சேயோன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x