Published : 24 Sep 2023 05:55 AM
Last Updated : 24 Sep 2023 05:55 AM

திமுக ஆட்சியில் 40 அணைகள் கட்டப்பட்டுள்ளன: அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் துரைமுருகன் மறுப்பு

சென்னை: திமுக ஆட்சியில் 40 அணைகள் கட்டப்பட்டுள்ளன என்று திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக ஆட்சியின் மீது ஒரு குற்றச்சாட்டு வைத்திருப்பதை இன்று (23.9.2023) வெளிவந்த ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ஒரு செய்தியாக வெளியிட்டிருக்கிறது. ‘‘தமிழகத்தை 9 ஆண்டுகள் ஆட்சி செய்த காமராஜர் விவசாயத்தை பாதுகாக்க 12 அணைகளைக் கட்டினார். ஆனால், 6-வது முறையாக ஆட்சி செய்யும் திமுக 5 அணைகளை மட்டுமே கட்டியுள்ளது’’ என்று ஒரு தவறான குற்றச்சாட்டை அண்ணாமலை கூறியிருக்கிறார்.

உண்மைக்கு மாறான செய்திகளைப் பேசி வம்பில் மாட்டிக் கொள்வதை அண்ணாமலை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். அதில் ஒன்றுதான் இது. காமராஜர், கிருஷ்ணகிரி அணை, சாத்தனூர் அணை, வைகை அணை, மணிமுத்தாறு அணை போன்ற அணைகளை கட்டினார் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. ஆனால், திமுக ஆட்சியில் 5 அணைகளை மட்டுமே கட்டினார்கள் என்று அண்ணாமலை சொல்வது வடிகட்டிய பொய்.

நம்பியாறு அணை, பொய்கையாறு அணை, கொடுமுடியாறு அணை, கடானா அணை, ராமநதி அணை, பாலாறு அணை, பொருந்தலாறு அணை, மருதாநதி அணை,பரப்பலாறு அணை, வடக்கு பச்சையாறு அணை, பிளவுக்கல் அணை, மோர்தானா அணை, அடவிநயினார் அணை, ராஜாதோப்பு அணை, ஆண்டியப்பனூர் ஓடை அணை, சாஸ்தா கோயில் அணை, குப்பநத்தம் அணை, இருக்கன்குடி அணை,செண்பகத்தோப்பு அணை, நங்காஞ்சியார் அணை என 40-க்கும் மேற்பட்ட அணைகளை கட்டியது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி.

ஆளுங்கட்சியின் மீது எதிர்க்கட்சி குற்றம் குறைகளைச் சொல்வது தவறில்லை. ஆனால், சொல்கிற குற்றச்சாட்டு உண்மையா என்பதை ஒரு முறை பரிசீலனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அவர் கூறும்குற்றச்சாட்டு யாவும் புஸ்வாணமாகிவிடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x