Published : 24 Sep 2023 05:59 AM
Last Updated : 24 Sep 2023 05:59 AM

சிறு, குறு தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளின் மின் கட்டண முறைகள் மாற்றியமைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளின் மின்கட்டண முறைகளை மாற்றியமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், 2022-23 முதல் 2026-27 நிதியாண்டு வரையிலான மின்கட்டண மனுவை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்தது.

இதனால் ஏற்பட்ட மின்கட்டண மாற்றம் தொடர்பாக, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புகளின் கோரிக்கைகளைப் பரிசீலித்து, கட்டணத்தை மாற்றியமைக்க முதல்வர் அறிவுறுத்தினார்.

அதன்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.2,000 கோடி வருவாய் குறைந்தாலும், தொழில்முனைவோரின் நலனைக் கருத்தில்கொண்டு, தொழிற்சாலைகளுக்கு 50 கிலோவாட் வரை உத்தேசித்திருந்த நிலையான கட்டணத்தை மாதம் ரூ.100-ல் இருந்து ரூ.75-ஆகவும், 50 கிலோவாட்டுக்கு மேல் 100 கிலோவாட் வரையிலான நிலைக் கட்டணத்தை ரூ.325-ல் இருந்து ரூ.150-ஆகவும், 100 கிலோவாட் முதல் 112 கிலோவாட் வரையிலான நிலைக் கட்டணத்தை ரூ.500-ல் இருந்து ரூ.150-ஆகவும்,112 கிலோவாட்டுக்கு மேல் உத்தேசித்திருந்த நிலைக் கட்டணத்தை ரூ.600-ல் இருந்து ரூ.550-ஆகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தொழில் மேம்பாட்டுக்கான நடவடிக்கையாக, சிறு குறு மற்றும்நடுத்தர தொழில் பிரிவு நுகர்வோரின் கோரிக்கைகளை ஏற்று, தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கான உச்சநேர நுகர்வுக்கான மின்கட்டணம் 25 சதவீதத்திலிருந்து 15-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு குறைக்கப்பட்ட கட்டணங்களுக்கான கூடுதல் மானியமாக ஆண்டுக்கு ரூ.145 கோடியை தமிழக அரசு வழங்குகிறது. இதனால் 3.37 லட்சம் தாழ்வழுத்த தொழிற்சாலை நுகர்வோர் பயனடைந்து வருகின்றனர்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைப்படி, 2022 ஏப்ரல் மற்றும் 2023 ஏப்ரல் மாத நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின்படி கணக்கிட்டால், 4.7 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். எனினும், இதை செயல்படுத்தும்போது பொதுமக்களும், தொழில் துறையினரும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யுமாறு முதல்வர் அறிவுறுத்தினார்.

அதன்படி, கட்டண உயர்வு விகிதம் மறுஆய்வு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், 2022 ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணுக்குப் பதிலாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் விலை குறியீட்டு எண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனால், கட்டண உயர்வு ரூ.4.70-ல்இருந்து ரூ.2.18-ஆக குறைக்கப்பட் டுள்ளது.

இவ்வாறு தொழில் நலம் காக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நூற்பாலைகளின் கோரிக்கைகள் தொடர்பாக நிதி, மனிதவள மேம்பாடு மற்றும் மின்சாரத் துறை அமைச்சர், சிறு, குறுமற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர், கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் கடந்த ஜூலை 21-ம்தேதி தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், ஜவுளித் தொழிலின் நிலைத்தன்மையை முதல்வரின் கவனத்துக் கொண்டு சென்றனர். தமிழக தொழில் துறை, ஜவுளித் துறையில் நிலவும் இடர்பாடுகளை ஆராய்ந்து, மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய கோரிக்கைகளை கடிதம் மூலம் தெரிவித்தும், மின் கட்டணம் தொடர்பான தொழிற்சாலைகளின் கோரிக்கைகளை பரிசீலித்தும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் அறிவுறுத்தினார்.

அதனடிப்படையில், பருவகாலத் தேவைக்கு ஏற்ப மாறும் தன்மையுள்ள மின்பளுவைக் கொண்ட தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு நிலைக் கட்டணத்தை குறைத்து கொள்ளும்வகையில், அனுமதிக்கப்பட்ட மின்பளுவைக் குறைத்துக்கொள்ளவும், மேலும் தேவைப்படும்போது அனுமதிக்கப்பட்ட மின்பளுவுக்குள் உயர்த்திக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

இந்த சலுகையை ஆண்டுக்கு நான்கு முறை பயன்படுத்திக் கொள்ளலாம். சூரிய ஒளி சக்தி மேற்கூரை மின் உற்பத்தி செய்யும் மின் இணைப்புகளுக்கு 15 சதவீத மூலதன மானியம் வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x