Published : 24 Sep 2023 06:07 AM
Last Updated : 24 Sep 2023 06:07 AM

மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்க பாஜக தலைமை மறுப்பு: பழனிசாமியுடன் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை

கோப்புப்படம்

சென்னை: தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்க டெல்லியில் அதிமுக வலியுறுத்திய நிலையில், பாஜக தலைமை அதை ஏற்க மறுத்துள்ளது. இந்நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மூத்த நிர்வாகிகள், பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏற்கெனவே ஜெயலலிதா குறித்து கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு அதிமுகதரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் அண்ணா குறித்து அண்மையில் அண்ணாமலை விமர்சித்திருந்தார். அந்த கருத்தில் உண்மை இல்லை எனவும், கூட்டணி தர்மத்தை மீறி தங்கள் தலைவர்களை அண்ணாமலை விமர்சித்து வருவதாகவும் அதிமுக நிர்வாகிகள் குற்றம்சாட்டினர். தொடர்ந்து, இரு கட்சி நிர்வாகிகள் மத்தியில் வார்த்தைப் போரும் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, கடந்த வாரம் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சந்தித்தபோது, மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக விவாதம் நடைபெற்றதாகவும், அதில் பாஜக அதிக எண்ணிக்கையில் தொகுதிகளைக் கேட்டதாகவும், இதில் பழனிசாமி அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு, அண்ணாமலையின், அண்ணா குறித்த பேச்சைக் கண்டித்து, பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். இதனால் இரு கட்சிகளிடையே சலசலப்பு நிலவுகிறது.

அண்ணாமலை, தான் தெரிவித்த கருத்து சரியானதுதான் என கூறி வரும் நிலையில், அவருக்கு எதிராக அதிமுக நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதன் ஒருபகுதியாக அதிமுக மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் நேற்று டெல்லி சென்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்து பேசியதாகக் கூறப்படுகிறது. மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க முயன்ற நிலையில், அவரைச் சந்திக்க முடியவில்லை.

இந்தச் சந்திப்பில், அதிமுகவுக்கு எதிராக அண்ணாமலை தொடர்ந்து பேசி வருவது கூட்டணியைப் பாதிக்கும். மக்களவைத் தேர்தலை ஆரோக்கியமாக எதிர்கொள்ள முடியாது. அவரை பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மாற்றினால்தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தொடர முடியும் என்று நிர்பந்தித்ததாகக் கூறப்படுகிறது.

இதை நட்டா ஏற்க மறுத்ததாகவும், கூட்டணி இல்லை என அறிவித்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு வந்திருப்பது ஏற்புடையதாக இல்லை என நட்டா தெரிவித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழகம் திரும்பியுள்ள அதிமுக நிர்வாகிகள், டெல்லி சந்திப்பு மற்றும் பாஜக தலைமையின் நிலைப்பாடு குறித்து பழனிசாமியுடன் தொலைபேசி வாயிலாகத் தெரிவித்தாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிகிறது.

இதனால், அதிமுக தலைமையிடமிருந்து கூட்டணி தொடர்பாக விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x