Published : 24 Sep 2023 06:19 AM
Last Updated : 24 Sep 2023 06:19 AM

திமுக தலைமையிலான அணி இண்டியா கூட்டணிக்கு முன்மாதிரி: பிரகாஷ் காரத் கருத்து

திருநெல்வேலி: “தமிழகத்தில் திமுக தலைமையில் அமைக்கப்பட்ட வலுவான கூட்டணிதான் இண்டியா கூட்டணிக்கான முன்மாதிரியாக அமைந்துள்ளது” என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தெரிவித்தார்.

பாளையங்கோட்டையில் நேற்று முன்தினம் இரவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: கடந்த 9 ஆண்டு காலத்தில் மோடி ஆட்சியில் ஊடக சுதந்திரத்தின் மீதும், ஜனநாயக விழுமியங்கள் மீதும் மிகக் கடுமையான தாக்குதல்கள் நடந்துள்ளன. உலகத்தில் பொருளாதாரத்தில் 5-வது பெரிய நாடாக இந்தியா உள்ளதாகவும், விரைவில் 3-வது பெரிய நாடாக மாற இருப்பதாகவும் மோடி தெரிவித்து வருகிறார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

ஜி-20 மாநாட்டில் கலந்து கொண்ட நாடுகளில் கடைசி நாடாக இந்திய பொருளாதாரம் உள்ளது. வேலையின்மை, விவசாயத்தை பாதிக்கும் திட்டங்கள், விலைவாசி உயர்வு போன்ற மோசமான கொள்கைகளை பாஜக அரசு அமல்படுத்தி வருகிறதே தவிர, வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் ஒட்டுமொத்த நாட்டின் வளத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சூறையாடிவிட்டன. மோடி அரசு அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தினால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சட்டப்பேரவைகளின் உரிமைகளை பறிக்கும் செயலாகும். ஒட்டு மொத்த அதிகாரத்தையும் தங்கள் கையில் கொண்டு வந்து, ஒற்றை ஆட்சி முறையை கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்கிறது. தேர்தலை கருத்தில் கொண்டுதான் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

2024 தேர்தலில் பாஜகவை தனிமைப்படுத்தி வீழ்த்துவது இண்டியா கூட்டணியின் இலக்கு. தமிழகத்தில் திமுக தலைமையில் பல்வேறு கட்சிகளை ஒன்றிணைத்து மிகப் பெரிய சக்தியாக இண்டியா கூட்டணி உருவெடுத்துள்ளது. இதுதான் பாஜகவை வீழ்த்துவதற்கான இண்டியா கூட்டணிக்கான முன்மாதிரியாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் மனோதங்கராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x