Published : 24 Sep 2023 06:31 AM
Last Updated : 24 Sep 2023 06:31 AM

சிவகங்கை | திருச்சி-ராமேசுவரம் ரயிலை நிறுத்திய போராட்ட குழுவினர்: 300-க்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீஸ்

சிவகங்கை ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்பினர்.

சிவகங்கை: முக்கிய ரயில்களை சிவகங்கையில் நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் நேற்று அனைத்துக் கட்சியினர், பொதுநல அமைப்பினர் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் போராட்ட குழுவினர் திருச்சி - ராமேசுவரம் ரயிலை அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து பாதி வழியில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 300-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

மாவட்ட தலைநகரான சிவகங்கையில் செங்கோட்டை-தாம்பரம் விரைவு ரயில், ராமேசுவரம்-வாரணாசி விரைவு ரயில், ராமேசுவரம்-அயோத்தியா விரைவு ரயில், ராமேசுவரம்-அஜ்மீர் விரைவு ரயில், ராமேசுவரம்-ஹூப்ளி, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவு ரயில் உள்ளிட்ட முக்கிய ரயில்களை நிறுத்த வேண்டும்.

காரைக்குடியோடு நிறுத்தப்பட்ட மன்னார்குடி-மானாமதுரை ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். பல்லவன் ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, வாழ்வுரிமைக் கட்சி, விசிக உள்ளிட்ட கட்சிகள், பொதுநல அமைப்புகள் இணைந்து ரயில் மறியல் போராட்டம் அறிவித்தனர்.

அதன்படி நேற்று காலை 9.08 மணிக்கு சிவகங்கை வரும் திருச்சி-ராமேசுவரம் ரயிலை மறிக்க திமுக நகராட்சி தலைவர் சிஎம்.துரை ஆனந்த், துணைத் தலைவர் கார்கண்ணன், முன்னாள் எம்எல்ஏ குணசேகரன், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ஜெயசிம்மன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர்.

மாவட்ட எஸ்.பி. அரவிந்த் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் சிவகங்கை ரயில் நிலையத்தில் குவிக்கப்பட்டனர். ஆனால் ரயிலில் பயணித்த போராட்டக்குழுவினர் சிலர் சிவகங்கை வருவதற்கு முன்பாகவே அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்ததால், ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் ரயிலை இயக்க நடவடிக்கை எடுத்தனர். எனினும் அடுத்தடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி குட்டிமணி தலைமையிலான பலர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீஸார் திணறினர்.

பின்னர் தண்டவாளத்தின் இருபுறமும் போலீஸார் பாதுகாப்பாக நின்று கொண்டு, ரயிலை மெதுவாக இயக்கி சிவகங்கை ரயில்நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அதன்பின்னர் அங்கு காத்திருந்தோர் ரயிலை இயக்க விடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் கடுமையாக போராடி அவர்களை அப்புறப்படுத்தினர்.

இதனால் சிவகங்கையில் இருந்து 9.10 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 40 நிமிடம் தாமதமாக 9.51 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

கடையடைப்பு போராட்டம்: ரயில் மறியலுக்கு வந்தவர்களில் சிலரை மட்டும் போலீஸார் ரயில் நிலையத்துக்குள் அனுமதித்தனர். இதனால் மற்றவர்கள் தடுப்புச் சுவர்களில் ஏறி குதித்தனர். சிலர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களை உள்ளே விடாமல் போலீஸார் தடுத்து நிறுத்தினர். மேலும் ரயில்களை நிறுத்த வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்துக்கு ஆதரவாக நகர் முழுவதும் வியாபாரிகள் கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x