Published : 05 Dec 2017 10:19 AM
Last Updated : 05 Dec 2017 10:19 AM

இது மருத்துவமனை அல்ல.. மறுவாழ்வு மையம்

மருத்துவமனை என்றால் வைத்தியம் பார்ப்பார்கள்; நோய் குணமானதும் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். ஆனால், மதுரை தோப்பூர் - ஆஸ்டின் பட்டி அரசு காசநோய் மருத்துவ மனையில் நோயாளிகளின் மறுவாழ்வுக்காக கைத்தொழிலையும் கற்றுத் தந்து வீட்டுக்கு அனுப்புகிறார்கள்.

மதுரை - திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் உள்ள தோப்பூரில், காசநோயாளிகளுக்கான அரசு தொற்றுநோய் மருத்துவமனை 1960-ல் தொடங்கப்பட்டது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக போக்குவரத்து வசதிகூட இல்லாத காட்டுப் பகுதியில் தொடங்கப்பட்டதால் இதை இன்னமும் மக்கள் ‘காட்டாஸ்பத்திரி’ என்று தான் கர்ண கடூரமாய் அழைக்கிறார்கள். இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் ஆயுள் தண்டனை கைதிகள் போலவும், இங்கு பணியாற்றும் மருத்து வர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் பனிஷ்மென்ட் ஏரியாவுக்கு மாறுதலாகி வந்தது போலவும் தான் அப்போதெல்லாம் உணரப்பட்டார்கள்.

ஐந்து வருடங்ளுக்கு முன்பு..

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், இங்கு வைத்தியம் பார்க்க வருவதற்கு நோயாளிகள் அச்சப்படுவார்கள். அந்தளவுக்கு இந்த மருத்துவமனை வளாகம் புதர் மண்டிக் கிடக்கும். சமூக விரோதிகள் ‘டாப்’ அடித்துக் கிடப்பார்கள். மருத்துவமனை இருந்த நிலையைப் பார்த்து, இங்கே சிகிச்சைபெற பிடிக்காமல் காசநோயாளிகள் இங்கு அடிக்கடி தற்கொலை செய்து கொண்டதும் உண்டு. சிலநேரங்களில், இப்படி உயிரை மாய்த்துக் கொள்கிறவர்களின் உடலை வாங்கக்கூட உறவினர்கள் வரமாட்டார்கள்.

இதெல்லாம் பழைய கதை. இப்போது, இந்த மருத்துவமனை தனியார் மருத்துவமனைகளுக்கு சவால் விடும் வகையில் மிளிர்கிறது. மருத்துவமனையின் எந்த இடத்திலும் ஒரு சிறு குப்பையைக்கூட பார்க்க முடியவில்லை. அந்தளவுக்கு, பார்க்கும் இடமெல்லாம் பளிச் தூய்மை கண்ணைப் பறிக்கிறது. பெரும்பாலும், மற்ற இடங்களில் சிகிச்சைபெற்று அது பலனளிக்காத நிலையில் உள்ள காச நோயாளிகள் தான் இங்கே சிகிச்சைக்கு வருகிறார்கள். இதனால், முன்பு இங்கு நோயாளிகள் இறப்பு விகிதமும் அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது, தரமான சிகிச்சைகளாலும் மருத்துவர்களின் கனிவான கவனிப்புகளாலும் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்திருக்கிறது.

மேலும் ஒரு மகுடமாய்..

நோயாளிகளைக் குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்புவதில் அதிக அக்கறை எடுத்து வரும் இந்த மருத்துவ மனையில் இப்போது, நோயாளிகளின் மறுவாழ்வுக்காக கைத்தொழில்களையும் கற்றுக் கொடுக்கிறார்கள். அதன்படி, தையல் பயிற்சி, கூடை பின் னுதல் உள்ளிட்ட சிறு தொழில்களைக் கற்றுக் கொடுக்கும் சிறுதொழில் பயிற்சிக் கூடமாகவும் இந்த மருத்துவமனை செயல்படுகிறது. இது மாத்திரமின்றி, இங்குள்ள நோயாளிகளின் மன இறுக்கத்தைக் குறைக்க, யோகா, தியானம் உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

இப்போது, இந்த மருத்துவமனைக்கு மேலும் ஒரு மகுடமாய் மறுவாழ்வு மையம் ஒன்றையும் கட்டிமுடித்திருக்கிறார்கள். இந்த மறுவாழ்வு மையம் நட்சத்திர ஓட்டலின் கருத்தரங்கு கூடம் போல் பளபளக்கிறது. இதன் முகப்பில் காலை, மாலை வேளைகளில் நோயாளிகள் அமர்ந்து ஒய்வெடுக்க வசதியாக புல்வெளி தரைப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரமான காற்றைச் சுவாசிக்கும் விதமாக மரம், செடி, கொடிகளையும் இங்கு நட்டு வைத்திருக்கிறார்கள். பொதுமக்களின் நமக்கு நாமே பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ள இந்த மறுவாழ்வு மையத்தில் இனி வாரம் ஒருமுறை டிஜிட்டல் திரையில் காசநோய் குறித்த விழிப்புணர்வு படங்களையும், காச நோயாளிகளுக்கு தன்னம்பிக் கையூட்டும் குறும் படங்களையும் திரையிட இருக்கிறார்கள்.

பிரத்தியேக ஆசிரியர்கள்

இங்கே, உள் நோயாளிகள் சதுரங்கம் உள்ளிட்ட சிறு, சிறு விளையாட்டுக்களை விளையாடவும், புத்தகங்கள் வாசிக்கவும் வசதிகள் வரப் போகின்றன. சிகிச்சையில் இருப்பவர்கள் தினமும் நடைப்பயிற்சி செய்வதற்காக பிரத்தியேக நடைபாதையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் திறப்பு விழா காணவிருக்கும் இந்த மறுவாழ்வு மையம் குறித்து மருத்துவமனையின் நிலைய மருத்துவர் எஸ்.காந்திமதிநாதனிடம் பேசினோம்.

“இதற்கு முன்பு, வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் மட்டும் யாராவது தன்னார்வலர்கள் இங்கு வந்து நோயாளிகளுக்கு கைத்தொழில் பயிற்சிகளை அளிப்பார்கள். சிகிச்சை பெறும் வார்டிலேயே இந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டதால் ஒரு சில நோயாளிகளுக்கு இது இடைஞ்சலாக இருந்தது. இந்த அசவுகரியத்தைப் போக்க இந்த மறுவாழ்வு மையத்தை உருவாக்கினோம்.

நோயாளிகளுக்கு கைத்தொழில் பயிற்சிகள் அளிக்கவும் யோகா, தியானம் உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்கவும் இந்த மையத்தைப் பயன்படுத்த இருக்கிறோம். இதற்காக பிரத்தியேகமாக ஆசிரியர்களையும் நியமிக்க இருக்கிறோம். மற்ற நேரங்களில், இங்கு பயிற்சி எடுக்கவரும் மருத்துவ மாணவர்களுக்கான கருத்தரங்குக் கூடமாகவும் இது செயல்படும்” என்று சொன்னவர் நிறைவாக, ‘‘சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தரும் ஆக்கமும் ஊக்கமும் தான் எங்களை இந்தளவுக்குச் செம்மையாக செயல்பட வைத்திருக்கிறது” என்றார்.

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x