Published : 24 Sep 2023 04:14 AM
Last Updated : 24 Sep 2023 04:14 AM
தருமபுரி: நத்தம் வகை நில விவரங்களை மேம்படுத்தி இணையத்தில் பதிவேற்றும் பணி காரணமாக, பத்திரப்பதிவு மேற்கொள்ள முடியாமல் தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனைதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கிராம நத்தம் போன்ற வகைப்பாடுகளின் கீழ் இருந்த நிலங்கள் தேவைக்கு ஏற்ப அரசின் வெவ்வேறு துறைகளின் பயன்பாட்டுக்கு அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் நிலங்கள் தொடர்பான விவரங்கள் வருவாய்த் துறை பதிவேடுகளில் முறையாக பதிவு செய்யப்படுகிறது.
அதே நேரம், இதுபோன்ற விவரங்கள் அத்துறையின் இணைய தளத்தில் போதிய விவரங்களுடன் பதிவேற்றம் செய்யப்படாத நிலையில் அது தொடர்பான பணிகள் தமிழக அரசால் சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.
இது குறித்து, தருமபுரியைச் சேர்ந்த மணி உள்ளிட்ட சிலர் கூறியது: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் வீட்டுமனைகள், வீடுகளுடன் கூடிய மனைகள் ஆகியவை தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு வீட்டு வசதி வாரியம் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டுடன் கூடிய மனையை வாங்கினோம்.
இதற்கான தொகையை முழுமையாக செலுத்திய நிலையில் வீட்டை ஒதுக்கீடுதாரர் பெயரில் பத்திரப்பதிவு செய்துகொள்ள தேவையான ஆவணங்கள் வீட்டுவசதி வாரியம் மூலம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பத்திரப்பதிவு மேற்கொள்ள பதிவு பெற்ற பத்திர எழுத்தர் மூலம் பதிவுத் துறையின் இணையதளத்தில் பதிவு செய்ய ஆன்லைன் முறையில் முயற்சித்த போது முடியவில்லை.
குறிப்பிட்ட மனையின் எண்ணை உள்ளீடு செய்து விவரங்களை தேடும்போது அந்த மனைக்கான பக்கம் திறக்கவில்லை. இது குறித்து பத்திர எழுத்தர்கள் விசாரித்தபோது, ‘முன்பு கிராம நத்தமாக இருந்த நிலம் பின்னர் வீட்டுவசதி வாரியத்துக்கு வழங்கப்பட்டிருக்கும். அந்த நிலத்தின் புதிய நிலை தொடர்பான விவரங்களை இணையத்தில் பதிவேற்றும் பணியை தற்போது அரசு மேற்கொண்டு வருவதால் இவ்வகை நிலங்களை பத்திரப்பதிவு செய்வதை தற்காலிகமாக அரசு நிறுத்தி வைத்திருப்பதாக தெரிகிறது.
அரசு அனுமதி அளிக்கும் வரை காத்திருக்க வேண்டும்’ என்ற தகவல் தெரியவந்தது. ஆனால், பத்திரப்பதிவு செய்து கொள்ள அதிகாரம் அளிக்கும் வகையில் வீட்டுவசதி வாரியம் மூலம் வழங்கப்படும் ஆவணங்கள் பெறப்பட்டதில் இருந்து 90 நாட்கள் வரை மட்டுமே செல்லத்தக்கவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
90 நாட்கள் அவகாசம் முடிந்துவிட்டால் மீண்டும் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் முறையாக விண்ணப்பித்து காலநீட்டிப்பு அனுமதி பெற வேண்டும் எனவும் கூறப்படுகிறது. 2 மாதங்களாகியும் இவ்வகை நிலங்களின் பதிவுக்கு அரசு விதித்துள்ள தற்காலிக தடை விலக்கப்படாததால் பதிவு செய்ய முடியாமல் தவிக்கிறோம்.
இது பற்றி விசாரித்தபோது வீட்டு வசதி வாரிய மனைகள் மட்டுமன்றி வேறு வகை மனைகள் உட்பட தமிழகம் முழுவதும் 540-க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவு அலுவலகங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவுப் பணி மேற்கொள்ள முடியாமல் பாதிப்படைந் துள்ளதாக தெரிகிறது. தருமபுரி மாவட்டத்தில் வீட்டுவசதி வாரிய மனை ஒதுக்கீடுதாரர்கள் 25-க்கும் மேற்பட்டோர் இவ்வாறு பாதிப்படைந்துள்ளனர்.
இதனால், தேவையற்ற அலைச்சல், மன உளைச்சல் போன்ற சிரமங்களுக்கு உள்ளாகி வருகிறோம். அரசுத் துறையில் நிலுவையில் வைக்கப்பட்ட பணிக்காக, பத்திரப்பதிவு மேற்கொள்ள வருவோரை மாதக்கணக்கில் வஞ்சிப்பது பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக அரசுத் துறைகள் விரைவான நடவடிக்கை மேற்கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலங்களின் பதிவுப் பணிக்கு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT