Published : 23 Sep 2023 05:35 PM
Last Updated : 23 Sep 2023 05:35 PM
திருப்பூர்: “முத்துராமலிங்க தேவரிடம் அண்ணா மன்னிப்புக் கேட்டதாக பேசிய அண்ணாமலைக்கு திராவிட கட்சிகள் சரியான பதிலடி தந்திருக்க வேண்டும்” என திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மதுரையில் அண்ணா மன்னிப்புக் கேட்டதாக சொல்லி உள்ளார். ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்கிறார். ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்கிறார். அப்போது உடனிருந்த பலரும் தெரியப்படுத்திய பின்னரும், சிறு வருத்தமோ, மன்னிப்போ கேட்க அண்ணாமலை தயராக இல்லை. அவர் கட்சிக்குள் யாரையும் மதிப்பது இல்லை. இது மிக மிகத் தவறு. அண்ணா விவகாரத்தில் இருக்கின்ற திராவிட கட்சிகள், அண்ணாமலை பேசியதற்கு சரியான பதிலடி தந்திருக்க வேண்டும்.
திராவிட இயக்கங்கள் இதனை சரியாக கையாளவில்லை என்பது உள்ளபடியே வருத்தம் தருகிறது. எந்த ஆட்சியும் நிரந்தரமானதில்லை. இந்த பாஜக ஆட்சியும் மாறாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கட்சித் தலைவராக உள்ள அண்ணாமலை நிதானத்துடன் செயல்பட வேண்டும். சொல்லாத ஒன்றை, பேசாத ஒன்றை கட்சி தலைவராக இருக்கும் அண்ணாமலை, அண்ணா குறித்து பொய் சொல்கிறார். தவறை திருத்திக்கொள்வது தான் அண்ணாமலைக்கு புத்திசாலித்தனமாக இருக்கும்.
வைகோவின் நடைபயணம் நாடறிந்த ஒன்று. கன்னியாகுமரி தொடங்கி சென்னை வரை நடந்தே சென்றவர். அண்ணாமலை போல் நடைபயணம் சென்றவர் அல்ல. அப்போது வைகோவுக்கு கூடாத கூட்டமா, அண்ணாமலைக்கு கூடிவிட்டது. அதுவே நிலைக்கவில்லை. இந்தக் கூட்டம் எல்லாம் எந்த மாத்திரம்? அண்ணா குறித்து அண்ணாமலை பேசியதற்கு வருத்தம் தெரிவிக்காமல் போனால், அது அவரது அரசியல் எதிர்காலம் தக்க பின்விளைவை சந்திக்கும்” என்று திருப்பூர் சு.துரைசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT