Published : 23 Sep 2023 04:32 AM
Last Updated : 23 Sep 2023 04:32 AM

ஆவின் ஆரஞ்சு பால் மாதாந்திர அட்டை பெற கட்டுப்பாடு: புதிய விதிகளால் 33 ஆயிரம் அட்டைதாரர்கள் நீக்கம்

சென்னை: விவசாயிகளுக்கு பால் உற்பத்தி இணை தொழிலாக உள்ளது. பருவமழை பொய்த்தாலும் அவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் அரணாக பால் உற்பத்தி இருந்து வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள நிலமற்ற மற்றும் சிறு, குறு விவசாயிகள், பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 4.5 சதவீதம் ஆகும்.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலை கிராம அளவில் கொள்முதல் செய்ய 9,673 தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 728, திருவண்ணாமலையில் 618, நாமக்கல்லில் 518 சங்கங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 4 லட்சம் உறுப்பினர்களிடமிருந்து தினமும் 37 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

பச்சிளம் குழந்தைகளுக்கும், வளரிளம் பருவத்தினருக்கும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் சிறந்த ஊட்டச்சத்தாக பால் பயன்படுத்தப்படுகிறது. ஆவின் மூலம் மட்டும் தமிழகத்தில் தினமும் 31 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. நீலம் (நிலைப்படுத்தப்பட்டது), பச்சை (சமன்படுத்தப்பட்டது), ஆரஞ்சு (கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்டது), மெஜந்தா (கொழுப்பு சத்து நீக்கப்பட்டது) ஆகிய நிற பாக்கெட்களில் பால் விற்கப்படுகிறது. இதில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை அதிகம்.

ஆவின் பாலகங்கள் மற்றும் முகவர்கள் மூலமாக பால் விநியோகிக்கப்படுகிறது. அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட சலுகை விலையில், மாதாந்திர பால் அட்டைகள் மூலமாகவும் பால் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே மாதாந்திர பால் அட்டைகள் மூலம் நுகர்வோருக்கு பால் விற்பனை செய்யும் ஒரே கூட்டுறவு நிறுவனம் ஆவின் மட்டுமே. இந்த வகையில் மாதந்தோறும் சுமார் 5 லட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் தினமும் 11 லட்சம் லிட்டர் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் விற்பனையாகிறது. ஒரு லிட்டர் அதிகபட்சமாக ரூ.60-க்கு விற்கப்படுகிறது. அதேநேரம் பால் அட்டை மூலம் வாங்கினால் ரூ.46-க்கு கிடைக்கிறது. இதற்கிடையே, இந்த பாலை சிலர் பால் அட்டை மூலமாக ரூ.46-க்கு வாங்கி, வெளியில் ரூ.60-க்கு விற்பதை ஆவின் நிர்வாகம் கண்டுபிடித்தது.

அதைத்தொடர்ந்து, குடும்ப அட்டை அல்லது வீட்டு வாடகை ஒப்பந்த ஆவணம், கொண்டே மாதாந்திர பால் அட்டைகளை புதுப்பிக்கவும், ஒரு குடும்ப அட்டைக்கு தினமும் ஒரு லிட்டர் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் மட்டுமே வழங்கப்படும் எனவும் ஆவின் நிர்வாகம் கடந்த ஜூலை மாதம் கட்டுப்பாடு விதித்தது. மேலும், அண்மைக் காலமாக மாதாந்திர பால் அட்டை வாங்க ஆதார் எண் அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஆரஞ்சு பால் கேட்டு விண்ணப்பித்தால் ஆவின் விஜிலென்ஸ் போலீஸார் மூலமாக நுகர்வோரின் வீடுகளில் விசாரணை நடத்தப்படுவதாகவும், அதனால் நுகர்வோர் குடும்பங்களில் இருப்பவர்கள் அச்சத்துக்கு உள்ளாவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அடையாள ஆவணங்கள்: இதுதொடர்பாக ஆவின் அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது: ஆவின் நிர்வாகத்தின் சலுகைகளை யாரோ ஒருவர் பயன்படுத்துவதையும், அதனால், ஆவின் நிர்வாகத்துக்கு இழப்பு ஏற்படுவதையும் ஏற்க முடியாது. அடையாள ஆவணங்களை கேட்டால் சிலர், ஜெராக்ஸ் கடைகளில் வீணாகும் அடையாள ஆவண ஜெராக்ஸ்களை கொண்டு வந்து கொடுத்து சலுகை விலையில் பால் வாங்கி, விற்கின்றனர். இதனால் ஆவின் நிர்வாகத்துக்கு இழப்பு ஏற்படுகிறது. அதனால் ஆதார் எண் கேட்கப்படுகிறது.

மாதாந்திர பால் அட்டை கோரி விண்ணப்பிப்பவர் குறிப்பிட்ட முகவரியில்தான் வசிக்கிறாரா, அந்த குடும்பத்தில் வேறு யாரேனும் ஆரஞ்சு நிற பால் வாங்குகிறாரா என ஆய்வு செய்வதில் எந்த தவறும் இல்லை. தவறு செய்யாதவர்கள் அச்சப்படத் தேவையில்லை.

கடந்த ஜூலை மாதத்துக்கு முன்பு ஆரஞ்சு பால் அட்டைதாரர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 5 ஆயிரமாக இருந்தது. ஆவின் நிர்வாகத்தின் கட்டுப்பாடுகள், கள விசாரணைகள் மூலமாக பயனாளிகளின் எண்ணிக்கை 72 ஆயிரமாக குறைந்துள்ளது. போலியான முகவரிகளை கொடுத்து பால் வாங்கி மோசடியில் ஈடுபட்ட 33 ஆயிரம் அட்டைதாரர்கள் குறைந்துள்ளனர்.

ஆனால் ஆரஞ்சு பால் பாக்கெட் விற்பனை 11 லட்சம் லிட்டரில் இருந்து குறையவில்லை. இதனால், ஆவின் நிர்வாகத்துக்கு இழப்பும் குறைந்துள்ளது. இவ்வாறு ஆவின் அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x