Published : 23 Sep 2023 04:18 AM
Last Updated : 23 Sep 2023 04:18 AM
சென்னை: அதிமுக மூத்த நிர்வாகிகள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட 5 பேர் நேற்று டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து அண்ணாமலை விவகாரம் மற்றும் மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, கடந்த வாரம் டெல்லி சென்று அமித் ஷாவை நேரில் சந்தித்தார். அதன் பிறகு தமிழகத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் அண்ணா குறித்து விமர்சிக்க, அதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எதிர்வினையாற்றி இருந்தார். அதை அண்ணாமலை விமர்சித்திருந்தார். இந்நிலையில் கடந்த 18-ம் தேதி, பாஜகவுடன் கூட்டணி இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பானது. பின்னர் அதிமுக, பாஜக நிர்வாகிகள் மத்தியில் வார்த்தை போர் நடைபெற்று வந்தது. ஜெயக்குமாரின் கூட்டணி முறிவு அறிவிப்பு தமிழகத்தில் விவாதப் பொருளாக மாறியது.
அதன் பிறகு தேசிய பாஜக நிர்வாகிகள், பழனிசாமியை தொடர்புகொண்டு பேசிய நிலையில், மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாகவும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்பாகவும், பொதுவெளியில் பேச வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து இரு தரப்பினர் மத்தியிலும் கடந்த சில நாட்களாக அமைதி நிலவிவந்த போதிலும், தான் பேசியது உண்மை, நான் மன்னிப்பு கோரப்போவதில்லை என அண்ணாமலை பேசி இருப்பது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், டெல்லியில் அமித் ஷா மற்றும் பழனிசாமி சந்திப்பின்போது தமிழகத்தில் பாஜக போட்டியிட உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை, போட்டியிட உள்ள தொகுதிகள் குறித்த விருப்பத்தை அமித் ஷா தெரிவித்திருப்பதாகவும், அது குறித்து பழனிசாமி, அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தபோது, அவ்வளவு தொகுதிகளை பாஜகவுக்கு வழங்க வேண்டாம் என தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
தொகுதி பங்கீடு தொடர்பாக..: இந்நிலையில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தவும், அண்ணாமலை மீது புகார் தெரிவிக்கவும், அதிமுக மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நேற்று கேரள மாநிலம் கொச்சி வழியாக டெல்லி சென்றுள்ளனர்.
அவர்களுடன் டெல்லியில் தங்கியுள்ள சி.வி.சண்முகமும் இணைந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்கு முன்பாக தமிழக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து அண்ணாமலையின் செயல்பாடுகள், அதனால் மக்களவை தேர்தலில் கூட்டணி தேர்தல் பணியில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசியதாகவும், அண்ணாமலையின் பதவியைப் பறிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து, மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு அதிமுக ஒதுக்க வாய்ப்புள்ள தொகுதிகள் மற்றும் எண்ணிக்கை குறித்தும் தெரிவித்ததாக தெரிகிறது.
இந்நிலையில் இன்று சி.வி.சண்முகம் தலைமையில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்று, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக சின்னம், கொடி, லெட்டர் ஹெட் போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி மனு கொடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT