Published : 23 Sep 2023 03:51 AM
Last Updated : 23 Sep 2023 03:51 AM
சென்னை: சென்னை - நெல்லை இடையே தென் தமிழகத்தின் முதல் ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக நாளை தொடங்கி வைக்கிறார். ரயிலை 110 கி.மீ. வேகத்தில் இயக்கி நேற்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இந்திய ரயில்வே, வந்தே பாரத் என்ற பெயரில் நவீன வசதிகளுடன் கூடிய அதிவிரைவு சொகுசு ரயிலை அறிமுகப்படுத்தி இயக்கி வருகிறது. இதில் ஜிபிஎஸ் டிராக்கர், கேமரா, ஒவ்வொரு இருக்கைக்கும் செல்போன் சார்ஜர், தானியங்கி கதவுகள், குளிர்சாதன வசதி என பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.
அதிகபட்சமாக மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்க முடியும் என்பதால், பயண நேரம் குறையும். இதனால், இந்த ரயில்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் - மைசூரு, சென்னை சென்ட்ரல் - கோவை ஆகிய 2 வழித்தடங்கள் உட்பட நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்கள் இடையே 25-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், சென்னை - நெல்லை இடையே நாளை (செப்.24) முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் இந்த சேவையை தொடங்கி வைக்கிறார். இது தமிழகத்தின் 3-வது வந்தே பாரத் ரயில், தென் தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயில் ஆகும். இதில் 8 பெட்டிகள் உள்ளன.
நெல்லை - சென்னை இடையே இரு மார்க்கத்திலும் நேற்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த ரயிலை லோகோ இன்ஸ்பெக்டர் காந்தி, லோகோ பைலட் மது மேனன், உதவி லோகோ பைலட் ஜோமோன் ஜேக்கப் இயக்கினர். அதிகபட்சமாக 110 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது.
தாம்பரத்தில் நிற்கும்: சென்னையில் இருந்து (எண்.20665) வரும் 25-ம் தேதியும், நெல்லையில் இருந்து (எண்.20666) வரும் 27-ம் தேதியும் வழக்கமான சேவை தொடங்க உள்ளது.
நெல்லையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரத்தில் நின்று மதியம் 1.50-க்கு சென்னை எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கத்தில் எழும்பூரில் பிற்பகல் 2.50-க்கு புறப்பட்டு இரவு 10.40-க்கு நெல்லையை சென்றடையும். செவ்வாய் தவிர மற்ற 6 நாட்களும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT