Published : 23 Sep 2023 06:03 AM
Last Updated : 23 Sep 2023 06:03 AM

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் - பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் அதிமுக எம்எல்ஏக்கள் மீண்டும் மனு

சட்டப்பேரவை கூட்டம் விரைவில் தொடங்க உள்ள நிலையில், பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் மனு அளித்த பின், செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள். படம்: ம.பிரபு

சென்னை: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கு இருக்கை ஒதுக்குவது தொடர்பாக, பேரவைத் தலைவர் மு.அப்பாவுவிடம், அதிமுக எம்எல்ஏக்கள் நேற்று மீண்டும் மனு அளித்துள்ளனர்.

சட்டப்பேரவை, அக். 9-ம் தேதி மீண்டும் கூட உள்ளது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, கடம்பூர் ராஜூ, ஓ.எஸ்.மணியன், பேரவை முன்னாள் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் நேற்று பேரவைத் தலைவர் அப்பாவுவை சந்தித்து, எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக மீண்டும் ஒரு மனு அளித்தனர்.

இதுகுறித்து, கே.ஏ.செங் கோட்டையன் கூறியதாவது: தேர்தல் ஆணையம், அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற நிலையை பழனிசாமிக்கு வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றமும் அதிமுகவின் தலைமை, பொதுச்செயலாளர் பழனிசாமி என்று தீர்ப்பளித்துள்ளது. அதன் அடிப்படையில்தான், பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தீர்மானம் நிறைவேற்றி, ஏற்கெனவே 2 கடிதங்கள் அளித்துள்ளோம். இன்று பேரவைத் தலைவரிடம் 3-வது கடிதமும் அளித்துள்ளோம்.

பேரவைத் தலைவர், இருக்கை வழங்குவதில் பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். பழனிசாமி தலைமையில் ஆட்சி நடந்தபோது, எதிர்க்கட்சி துணைத்தலைவராக தற்போதைய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, தேமுதிக துணைத் தலைவராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டார். இது சட்டப்பேரவை மரபின் அடிப்படையில் நியமிக்கப்பட்டதாகும். பெரும்பான்மை சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தலைமையில் இயங்கும் இந்த இயக்கத்துக்கு துணைத் தலைவர் சட்டப்பேரவையில் இடம்பெற வேண்டும். அதற்கான இடத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். எங்கள் கடிதத்தில் இடம் வழங்குகிறீர்களா இல்லையா? என்பதை கடிதம் மூலம் தெரிவிக்கும்படி வலியுறுத்தியுள்ளோம். பதில் வந்ததும், பொதுச்செயலாளர் பழனிசாமி முடிவெடுப்பார்.

எங்களை பொறுத்தவரை பேரவைத் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார் என்று நம்பிக்கை உள்ளது. கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பழனி சாமி முடிவெடுப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x