Last Updated : 27 Dec, 2017 08:27 AM

 

Published : 27 Dec 2017 08:27 AM
Last Updated : 27 Dec 2017 08:27 AM

திருமண மண்டபம், ஹோட்டல்களில் மீதமாகும் உணவை சேகரித்து ஏழைகளுக்கு வழங்கும் திட்டம்: ஜனவரி முதல் சென்னையில் அமல்படுத்த முடிவு

உணவு தயாரிப்பு நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் மீதமாகும் உணவை சேகரித்து ஏழைகளுக்கு வழங்கும் திட்டத்தை தன்னார்வ அமைப்பினரின் பங்களிப்போடு செயல்படுத்த உணவு பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக மாநில உணவு பாதுகாப்புத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்தியாவில் பசியால் வாடும் ஏழைகள் லட்சக்கணக்கில் இருந்தும், உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களில் ஆண்டுதோறும் 40 சதவீதம் வீணடிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

விழாக்கள், திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பல இடங்களில் மீதமாகும் உணவை யாருக்கு, எங்கு அளிப்பது என்று தெரியாமல் வீணடிக்கின்றனர். அதைத் தவிர்க்க ‘நோ ஃபுட் வேஸ்ட்’ என்ற தன்னார்வ அமைப்புடன் இணைந்து, மீதமாகும் உணவுப் பொருட்களை சேகரித்து ஏழைகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, வரும் ஜனவரி முதல் சென்னையில் உள்ள ஒரு மண்டலத்தில் இத்திட்டத்தை அமல்படுத்த உள்ளோம். இதற்காக தன்னார்வ அமைப்பினருக்கு தேவையான ஒரு வாகனம், வழிகாட்டுதல்களை உணவு பாதுகாப்புத் துறை அளிக்க உள்ளது. இத்திட்டத்தில் தன்னார்வலர்கள், உணவு பாதுகாப்புத் துறை, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் இணைந்து செயல்படுவர்.

பிரத்யேக செயலி

இத்திட்டத்துக்கென பிரத்யேக செயலி ஒன்றும் உருவாக்கப்பட உள்ளது. அதன்மூலம் உணவளிக்க விரும்புவோர் எங்கு உணவு தேவைப்படுகிறது என்ற தகவலை தெரிந்துகொள்ளலாம். தன்னார்வலர்கள் யாருக்கு உணவு தேவைப்படுகிறது என்று தகவல் தெரிவிக்கலாம். திட்டத்தின் செயல்பாட்டைப் பொறுத்து மற்ற இடங்களுக்கு விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

‘நோ ஃபுட் வேஸ்ட்’ அமைப்பின் சென்னை ஒருங்கிணைப்பாளர் பாலாஜி கூறிய தாவது:

சென்னை கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட வடபழனி, சைதாப்பேட்டை, தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழைகளுக்கு தேவை யான உணவை சேகரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் மட்டும் சுமார் 100 திருமண மண்டபங்கள் உள்ளன.

அதுதவிர, கல்லூரிகள், ஹோட்டல்கள், உணவு தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்தும் மீதமாகும் உணவைப் பெற்று விநியோகிக்க உள் ளோம்.

தன்னார்வலர்கள்

குறைந்தபட்சம் 50 பொட்டலங்கள் அளவுள்ள உணவை அளித்தால், நாங்களே நேரடியாக வந்து பெற்றுக்கொண்டு தேவைப்படுவோருக்கு விநியோகித்துவிடுவோம். அதற்கு குறைவான உணவாக இருந்தால் யாருக்கு, எங்கு உணவு தேவை என்ற தகவலை விநியோகிப்பாளர்களுக்கு தெரிவித்துவிடுவோம். இத்திட்டத்தின் கீழ் உணவளிக்க விரும்பும் நிறுவனங்கள், ஹோட்டல்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் 8248094427, 9087790877 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x