Last Updated : 08 Dec, 2017 12:07 PM

 

Published : 08 Dec 2017 12:07 PM
Last Updated : 08 Dec 2017 12:07 PM

நிவாரணம் தேவையில்லை; மீனவர்கள் வீடு திரும்பவேண்டும்- குமரியில் 5,000-க்கும் மேற்பட்டோர் 2-வது நாளாக போராட்டம்

ஒக்கி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி, மீனவ கிராமங்களைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்டோர் குளச்சல் சந்திப்பு மற்றும் மணவாளக்குறிச்சி ஆகிய இரண்டு இடங்களில் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

ஒக்கி புயலில் சிக்கி குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகி விட்டதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். ''மாயமான மீனவர்களைத் தேடும் பணியை துரிதப்படுத்த வேண்டும். நிவாரணம் தேவையில்லை, குடும்பத்தினர் கரை திரும்ப வேண்டும்'' என வலியுறுத்தி, மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

மணவாளக்குறிச்சியில் 2,500-க்கும் மேற்பட்டோரும், குளச்சல் சந்திப்பில் சுமார் 3,000 பேரும் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கியுள்ளது.

'மீனவர்களை விரைந்து மீட்க வேண்டும்', 'மீனவர்கள் ஒற்றுமை ஜிந்தாபாத்' என்று அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

மீனவ குடும்பங்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதைத் தொடர்ந்து காவல்துறையினர் 500 பேர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றும் நடைபெற்ற சாலை மறியல்

முன்னதாக மீனவர்களை மீட்க வலியுறுத்தி, மீனவ கிராமங்களைச் சேர்ந்த 8,000-க்கும் மேற்பட்டோர் நேற்று (வியாழக்கிழமை) குழித்துறை ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், திருவனந்தபுரம் - நாகர்கோவில் வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் நேற்று ரத்து செய்யப்பட்டன.

இதன்பிறகு, இரவு 7 மணியளவில் போராட்டக் குழுவினருடன், குமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் பேச்சுவார்த்தை நடத்தினார். 2 மணி நேரம் நீடித்த இப்பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், அதன் பிறகும் இரவில் போராட்டம் நீடித்தது. அதனைத் தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணியளவில் போராட்டத்தை மீனவர் குடும்பங்கள் கைவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x