Published : 28 Dec 2017 12:13 PM
Last Updated : 28 Dec 2017 12:13 PM
விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக தேசியப்பறவையான மயில் வேட்டையாடப்படுகிறது. முட்டைக்காக வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது.
விருத்தாசலம், உளுந்தூர்பேட்டை, திட்டக்குடி உள்ளிட்ட வனப் பகுதியில் மான், மயில், காட்டுப் பன்றி, குரங்கு, உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன. மான்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு சென்று, குடி நீர் மற்றும் இரை தேடும் போது,வாகனங்களில் சிக்கியும், வேட்டையாடும் கும்பல்களிடம் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வபோது நிகழ்கின்றன.
விளைநிலப் பகுதியில் இரைதேடும் மயில்கள், விருத்தாசலத்தை அடுத்த அரசகுழி, கொளப்பாக்கம், கோட்டேரி, வீரரெட்டிக்குப்பம், ஆலடி, மணக்கொல்லை கிராமப் பகுதிகளுக்கு படையெடுக்கின்றன. அங்குள்ள விளைநிலங்களிலும் முந்திரிக்காடுகளிலும் சுற்றித்திரியும் மயில்களை சிலர் பிடித்து, முட்டைக்காக வீடுகளில் வளர்க்கின்றனர்.
மேலும் மயில் குஞ்சுகளை விற்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.மேலும் சிலர் மயில் இறைச்சியை சாப்பிட்டால் ஆண்களுக்கு நல்லது என்ற நம்பிக்கையில் அவற்றை இறைச்சிக்காக வேட்டையாடுவதாகவும் வன விலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கொளப்பாக்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறுகையில், மயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இரவில் தலையில் டார்ச் லைட்டுடன் வரும் மர்மநபர்கள், மின்சார கோபுரத்தின் மீதும், மரக் கிளைகளில் உறங்கிக் கொண்டிருக்கும் மயில்களை வேட்டையாடுகின்றனர். இதனால் இரவு நேரங்களில் விளைநிலப் பகுதிக்குச் செல்லவே அச்சமாக உள்ளது என்கின்றனர்.
மயில் இறைச்சி விற்பனை
இதே போல் அரசகுழி பகுதியில் மயில் இறைச்சி விற்கப்படுகிறது.
இது குறித்து வன அலுவலர்களிடம் புகார் தெரிவித்தாலும், அவர்கள் இதுவரை மயில் வேட்டையை தடுக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மேலும் விவசாய நிலங்களில் இரைதேடும் மயில்களை மின்வேலி அமைத்து பிடிப்பது போன்ற செயல்களும் தொடர்வதாகத் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக விருத்தாசலம் வன அதிகாரி சரவணக்குமார் கூறுகையில், “விளைநிலப் பகுதியில் இரைதேடி வரும் மயில்களை சிலர் வேட்டையாடி வீட்டில் வளர்ப்பது தெரிந்து, அவைகளை மீட்டு, வேட்டையாடியவர்களை எச்சரித்துள்ளோம்.
3 ஆண்டு சிறை தண்டனை
தேசியப் பறவையான மயிலை பிடித்தால் அது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். மயிலை வேட்டையாடுதல், மாமிசத்தை உண்பது உள்ளிட்ட அனைத்துக்கும் 3 ஆண்டு சிறை தண்டனை உண்டு என்பதை இப்பகுதி கிராம மக்களிடையே எடுத்துக் கூறியிருக்கிறோம். மயில்கள் காயமடைந்த நிலையில் இருந்தாலோ அல்லது யாரேனும் வேட்டையாடினாலோ அதுகுறித்து தகவலை வனத் துறையினருக்கு தெரிவிக்கச் சொல்லியும் அறிவுறுத்தியிருக்கிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT