Published : 13 Dec 2017 10:50 AM
Last Updated : 13 Dec 2017 10:50 AM
ராஜினாமா ஒப்புதல் கடிதத்தில் பிழைகளை திருத்தி அனுப்பக்கோரி, விழுப்புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரிடம் ஆசிரியை சபரிமாலா மனு அளித்துள்ளார்.
திண்டிவனம் அருகே ஜக்காம்பேட்டையைச் சேர்ந்த ஜெயகாந்தன் மனைவி சபரிமாலா ( 35). இவர் ஒலக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட வைரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இவர் இந்தியா முழுவதும் ஒரே கல்வித் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதிவாணனிடம் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்.
இவருடைய ராஜினாமாக் கடிதத்தை பள்ளிக்கல்வித்துறை ஏற்றுக்கொண்டது. அவ்வாறு ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதற்கான ஒரு கடிதத்தை சபரிமாலாவுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட தொடக்கக் கல்வித்துறை அனுப்பியுள்ளது.
அந்தக் கடிதம் மிகவும் தாமதமாக வந்ததாகவும், அதில் பல தவறுகள் இருப்பதாகவும் கூறி நேற்று மாலை சபரிமாலா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதிவாணனிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 25.10.17 தேதியன்று மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றரை மாதம் கழித்து 9.12.17 அன்று எனக்கு கிடைத்தது. அந்தக் கடிதத்தில் எனது பெயர் அ.சபரிமாலா என்பதற்கு பதிலாக எ.சபரிமாலா எனவும், என்னுடைய மகனின் பெயர் ஜெ.ஜெயசோழன் என்பதற்கு பதிலாக ஜே.ஜெயசோழன் என்றும் தலைப்பெழுத்தை தவறாக குறிப்பிட்டு அனுப்பியிருக்கிறார்கள். இது எனக்கு மிகப்பெரிய மனவேதனையை ஏற்படுத்துகிறது.
அரசு தரப்பில் இருந்து அனுப்பப்படும் கடிதத்தில் தலைப்பெழுத்து தவறாக உள்ளது என்பது அரசு எந்திரம் எவ்வளவு அலட்சியமாக செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது. இந்தக் கடிதத்தை ஆவணமாகப் பயன்படுத்தி வருங்கால வைப்புநிதி கணக்கை என்னால் எப்படிப் பெற முடியும்.
கல்வித்துறை அனுப்புகிற கடிதத்தில் பிழைகள் இருக்குமாயின் மாணவர்களை பிழையின்றி தமிழில் எழுதுங்கள் என்று எப்படி நம்மால் வழிநடத்த முடியும்?. ஆகவே அந்தக் கடிதத்தில் ஏற்பட்டுள்ள பிழைகளை திருத்தம் செய்து கடிதம் அனுப்ப வேண்டும் என்று அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT