Published : 22 Sep 2023 04:23 AM
Last Updated : 22 Sep 2023 04:23 AM

வாடகை கார் ஓட்டுநர் வங்கி கணக்கில் ரூ.9,000 கோடி: தனியார் வங்கி அனுப்பியதால் அதிர்ச்சி

ராஜ்குமார்

சென்னை: தனியார் வங்கியிலிருந்து வாடகை கார் ஓட்டுநர் வங்கிக் கணக்குக்கு ரூ.9 ஆயிரம் கோடி அனுப்பப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகேயுள்ள நெய்க்காரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (28). வாடகை கார் ஓட்டுநரான இவர், தனது நண்பர்களுடன் சென்னை கோடம்பாக்கத்தில் தனியாக அறை எடுத்து தங்கி, பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 9-ம்தேதி 3 மணிக்கு அவரது செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், அவரது வங்கிக் கணக்கில் ரூ.9 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த தகவலில் நிறைய பூஜ்ஜியங்கள் இருந்ததால், எவ்வளவு தொகை என்பதை ராஜ்குமாரால் உடனடியாக கணக்கிட முடியவில்லை. அவரது வங்கிக் கணக்கில் ஏற்கெனவே ரூ.105 மட்டுமே இருந்தது. யாரோ தன்னை ஏமாற்றி, கிண்டல் செய்வதற்காக குறுந்தகவலை அனுப்பி இருக்கலாம் என்று அவர் கருதினார்.

எனினும், தொடர்ந்து குறுந்தகவலை ஆய்வு செய்தபோது, தான் கணக்கு வைத்திருந்த தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் இருந்து வந்த தகவல்தான் என்றும், ரூ.9 ஆயிரம் கோடி தனது கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதையும் அவர் அறிந்தார். மேலும், தனது நண்பரின் வங்கிக் கணக்குக்கு செல்போனில் இருந்து ரூ.21 ஆயிரம் செலுத்திப் பார்த்தார். அந்த தொகை சென்றவுடன், மீதமுள்ள தொகை குறித்து ராஜ்குமாருக்கு குறுந்தகவல் வந்தது.

34 நிமிடங்களில்...: எனினும், 34 நிமிடங்களில் அந்தப் பணம் வங்கியில் இருந்து திரும்பப் பெறப்பட்டது. ஆனால், ரூ.21 ஆயிரம் பணத்தை வேறு கணக்குக்கு ராஜ்குமார் அனுப்பி இருந்ததை வங்கி அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதையடுத்து, வங்கியின் தலைமை அலுவலகத்திலிருந்து ராஜ்குமாரை தொடர்பு கொண்ட அதிகாரி ஒருவர், தவறுதலாக அவரது வங்கிக் கணக்கில் ரூ.9 ஆயிரம் கோடி செலுத்தியாகவும், அதை மீண்டும் எடுத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், மற்றொரு அதிகாரி தொடர்புகொண்டு, ரூ.21 ஆயிரத்தை திருப்பித் தரவில்லை என்றால், காவல் துறையில் புகார் அளித்து, சிறைக்கு அனுப்பி விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். இதனால் பயந்துபோன ராஜ்குமார், வழக்கறிஞர் ஒருவருடன் தி.நகரில் உள்ள மெர்க்கன்டைல் வங்கிக் கிளைக்கு சென்றார். அங்கு இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பின்னர், இரு தரப்பினரும் சமாதானமாகப் போக முடிவு செய்தனர். நண்பருக்கு அனுப்பிய ரூ.21 ஆயிரத்தை ராஜ்குமார் திருப்பித் தர வேண்டாமென தெரிவித்த வங்கி அதிகாரிகள், கார் வாங்க கடனுதவி செய்வதாகவும் உறுதியளித்து ராஜ்குமாரை அனுப்பிவைத்தனர்.

தொழில்நுட்பக் கோளாறு: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தவறுதலாக பணம்டெபாசிட் செய்யப்பட்டு விட்டதாக வங்கி அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து ராஜ்குமார் கூறும்போது "இவ்வளவு பணத்தை கனவில்கூட நான் நினைத்துப் பார்த்ததில்லை. ரூ.9 ஆயிரம் கோடி எனது வங்கிக் கணக்குக்கு வந்தவுடன், திகைத்துப் போனேன். ஆனால், அரை மணி நேரத்தில் பணம் மீண்டும் மாயமானது. நண்பர்கள் அறிவுரைப்படியும், உண்மையிலேயே பணம் வந்துள்ளதா என்ற சந்தேகத்தின் பேரிலும்தான் நண்பருக்கு ரூ.21 ஆயிரம் அனுப்பி பார்த்தேன்.

எனது செல்போனுக்கு அடுத்தடுத்து 2 அழைப்புகள் வந்தன. வங்கி அதிகாரி ஒருவர், கோரிக்கை விடுப்பதுபோல பேசினார். மற்றொருவரோ காவல் நிலையத்தில் புகார் அளித்து, சிறையில் தள்ளுவோம் என்று மிரட்டினர். நான் பயப்பட வில்லை. எனினும், தி.நகரில் உள்ள வங்கி அலுவலகத்துக்கு சென்று, விளக்கம் அளித்தேன்" என்றார்.

வாடகைக் கார் ஓட்டுநர் வங்கிக் கணக்குக்கு தனியார் வங்கி சார்பில் ரூ.9 ஆயிரம் கோடி அனுப்பப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், சமூக வலைதளங்களில் வைரலானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x