Published : 22 Sep 2023 04:12 AM
Last Updated : 22 Sep 2023 04:12 AM
சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 15-ம்தேதி தொடங்கிவைத்தார். இத்திட்டத்தில் 1.06 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 உரிமை தொகை சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்வு செய்யப்படாத 56.50 லட்சம் பெண்களுக்கு,விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களுடன் கடந்த18-ம் தேதி முதல் குறுஞ்செய்திஅனுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, குடும்ப உறுப்பினர் வருமான வரி செலுத்துவதால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பம் கள ஆய்வில் இருப்பதாகவும் பலருக்கு குறுஞ்செய்திகள் வந்துள்ளன.
தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்த சூழலில், விண்ணப்பம் கள ஆய்வில் இருப்பதாக குறுஞ்செய்தி வந்தால், மீண்டும் மேல்முறையீடு செய்வதா என தெரியவில்லை என்று பல பெண்கள் தெரிவித்துள்ளனர்.
இ-சேவை மையங்களில்...: இந்த சூழலில், பலரும் தங்கள் பகுதிகளில் உள்ள இ-சேவை மையங்களில் இத்திட்டத்தில் தகுதியானவர்கள் என்பதற்கான ஆவணங்களுடன் மேல்முறையீடு செய்து வருகின்றனர். தகுதியான ஒரு பயனாளிகூட விடுபடக் கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருப்பதால், மேல்முறையீடு செய்வதற்கான விண்ணப்பங்களை வழங்கி, பதிவு செய்யவும், கள ஆய்வு நடத்தி பரிசீலிக்கவும் அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அந்தந்த மண்டல அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT