Published : 22 Sep 2023 05:58 AM
Last Updated : 22 Sep 2023 05:58 AM
சென்னை: நீட் தேர்வின் பலன் பூஜ்யம் என்பதை பாஜக அரசு ஒப்புக் கொண்டுள்ளது. நீட் தேர்வைக் கொண்டு உயிர்களைப் பறித்ததற்காகவே பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றியாக வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாணவர் சேர்க்கை தொடர்பாக நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட உத்தரவில், முதுநிலை நீட் தேர்வுக்கான ‘கட்-ஆஃப்’ மதிப்பெண் பூஜ்யமாக நிர்ணயிக்கப்பட்டது. மாணவர்கள் சேர்க்கை இடங்கள் அதிகமாக காலியாக இருப்பதால்இதுபோன்று அறிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வின் பலன் பூஜ்யம்தான் என்பதை மத்திய பாஜகஅரசே ஒப்புக் கொண்டிருக்கிறது. முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தகுதி மதிப்பெண் பூஜ்யம்தான் என்று வரையறுப்பதன் மூலம் நீட் என்றால் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என்பதில் தகுதி என்பதற்கு பொருள் கிடையாது என்பதை அவர்களே ஒப்புக்கொண்டு விட்டார்கள். கோச்சிங் சென்டர்களில் சேருங்கள். நீட் தேர்வுக்கு பணம் கட்டுங்கள், போதும் என்றாகி விட்டது.
ஆக, நீட் - பூஜ்யம் என்றாகி விட்டது. இதைத்தான் நாங்கள் இத்தனை ஆண்டுகளாகச் சொல்லி வந்தோம். எத்தனை உயிர்கள் பலியாகியிருக்கின்றன. இரக்கமே இல்லாமல் இருந்துவிட்டு இப்போது இப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கின்றனர். நீட் என்ற பலி பீடத்தைக் கொண்டு உயிர்களைப் பறித்ததற்காகவே இந்த பாஜக ஆட்சியை அகற்றியாக வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
வைகோ, அன்புமணி அறிக்கை: இந்த விவகாரத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ஆகியோரும் மத்திய அரசைக் கண்டித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வைகோ: மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வுதான் தகுதி என மத்திய அரசு விடாப்பிடியாக இருந்து வரும் நிலையில்,தற்போது முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் பெற்றிருந்தாலும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று அறிவித்துள்ளது. இதன்மூலம் நீட் தேர்வுவெறும் கண்துடைப்பு என்பது தெரிகிறது. இதிலிருந்தே மருத்துவக் கல்விக்கு நீட் என்பது ஒரு மோசடியான தகுதித் தேர்வு என்பது தெரியவருகிறது. எனவே மத்திய அரசுமருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்துவதை நிறுத்த வேண்டும்.
அன்புமணி: இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரநீட் தகுதி மதிப்பெண்கள் பூஜ்யம்பெர்சன்டைல் ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எழுதியவர்கள் அனைவருமே, கோடிக்கணக்கில் பணம் இருந்தால் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம் என்பதுதான் இதன் பொருள். இது மருத்துவக் கல்வியின் தரத்தை எந்த வகையிலும் உயர்த்தாது. மாறாக மாணவர்களின் தகுதியைக் குறைக்கும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளின் வருமானம் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது சமூக அநீதியாகும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, மருத்துவப் படிப்புக்கான அனைத்து நிலைகளிலும் நீட்தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT