Published : 21 Sep 2023 09:07 PM
Last Updated : 21 Sep 2023 09:07 PM
மதுரை: “அண்ணாமலையை மட்டுமே எதிர்கிறோம். எங்களுக்கும் பாஜகவுக்கும் பிரச்சினையில்லை” என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு முன்னிலையில் பாஜக மாவட்டத் துணை தலைவர் ஜெயவேல் மற்றும் பாஜக, தேமுதிக கட்சிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் இணைந்தனர். அவர்களை வரவேற்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, அதிமுகவில் இணைத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் செல்லூர் கே.ராஜூ கூறியது: “பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் உள்ள நிர்வாகிகள் அதிமுகவில் இணைய ஆர்வமாக உள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின் வரலாறு தெரியாமல் பேசி வருகிறார். விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டாகவே பேசி வருகிறார். தமிழகத்தில் அண்ணா, பெரியார் காலத்திலேயே சனாதனம் ஒழிக்கப்பட்டுவிட்டது. அதிமுகவில் சாதி, மத, பேதமின்றி செயல்பட்டு வருகிறோம். அதிமுகவின் அவைத் தலைவராக ஓர் இஸ்லாமியரை எடப்பாடி பழனிச்சாமி அமர வைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு செல்லூர் ராஜூவாகிய நான் சவால் விடுகிறேன். சனாதனம் பேசுகிற உதயநிதி ஸ்டாலின், திமுகவின் தலைவராக ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை வர விடுவார்களா?
எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தில் அனைவரும் ஒன்றாக உணவு உண்ண வைத்தே சனாதனத்தை ஒழித்தார். உதயநிதி ஸ்டாலின் நடிகராக இருந்ததால் அவருக்கு அரசியல் வரலாறு தெரியாது. மகளிர் உரிமைத் தொகை திமுகவுக்கு ஆதரவாக இருக்காது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் விண்ணப்பித்த அனைவருக்கும் 2000 ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், தமிழகத்தில் 1 கோடியே 6 லட்சம் பேருக்கு உரிமைத் தொகை கொடுத்து விட்டு மற்றவர்களுக்கு ஸ்வாகா கொடுத்து விட்டார்கள். திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றததால் மக்கள் கொதித்து எழுந்துள்ளனர். மகளிர் உதவித் தொகை யானைப் பசிக்கு சோளப்பொரி கொடுத்தது போல உள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கருத்து, செயல்பாட்டைதான் எதிர்க்கிறோம். ஜெயலலிதா, அண்ணா குறித்து அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார். முத்துராமலிங்க தேவரை நாங்கள் தெய்வமாக வழிபட்டு வருகிறோம். எங்கள் கொள்கை அண்ணாயிசம். இதைதான் எம்ஜிஆர், ஜெயலலிதா கடைபிடித்தார்கள். தற்போது கே.பழனிசாமியும் கடைபிடிக்கிறார்.
எங்களுக்கும் மோடி, நட்டா, அமித் ஷா ஆகியோருக்கும், பாஜகவுக்கும் பிரச்சினையே இல்லை. அவர்கள் அதிமுவையும், எங்கள் பொதுச் செயலாளரையும் நன்றாக மதிக்கிறார்கள். அண்ணாமலை எங்களை விமர்ச்சிக்கிறார் என்ற வருத்தத்தில்தான் அவரை மட்டுமே நாங்கள் எதிர்கிறோம். பாஜக தலைவரை நாங்கள் எப்படி மாற்றச் சொல்ல முடியும். பாஜக உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT