Published : 21 Sep 2023 08:54 PM
Last Updated : 21 Sep 2023 08:54 PM

6 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.560 கோடி இழப்பீடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: அரசின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2022-2023-ஆம் ஆண்டு சம்பா பருவ நெற்பயிரில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட மகசூல் இழப்புக்கு ரூ.560 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, பயிர் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2022-2023 ஆம் ஆண்டில் இத்திட்டம் 37 மாவட்டங்கள் அடங்கிய 14 தொகுப்புகளில் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம், இப்கோ–டோக்கியோ, பஜாஜ் அலையன்ஸ், எச்.டி.எப்.சி எர்கோ மற்றும் ரிலையன்ஸ் பொது காப்பீட்டு நிறுவனங்களால் செயல்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிரில், 11.20 லட்சம் விவசாயிகளால் 24.45 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டது. மொத்த காப்பீட்டுக் கட்டணத்தில் தமிழ்நாடு அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.1,375 கோடியும், ஒன்றிய அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.824 கோடியும், விவசாயிகளின் பங்குத் தொகையாக ரூ.120 கோடியும் ஆக மொத்தம் ரூ.2,319 கோடி காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

2022-2023-ஆம் ஆண்டு சம்பா பருவ நெல் சாகுபடியில் 46 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி அடையப்பட்ட போதிலும், வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்த காரணத்தால் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தென்காசி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட மிதமான வறட்சியால் 3,52,797 ஏக்கர் பரப்பளவில் 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.181.40 கோடி தொகையை தமிழ்நாடு அரசு 1,87,275 விவசாயிகளுக்கு 4.9.2023 அன்று வழங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து, தற்போது பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட மாவட்டங்களில் வறட்சி, வெள்ளம், புயல், பருவம் தவறிய மழை போன்ற பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் சுமார் 7 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்ட மகசூல் இழப்பிற்கு, திட்ட விதிமுறைகளின்படி பாதிப்படைந்த பகுதிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக மொத்தம் 560 கோடி ரூபாய் சுமார் 6 லட்சம் தகுதி வாய்ந்த விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x