Published : 21 Sep 2023 08:40 PM
Last Updated : 21 Sep 2023 08:40 PM
மதுரை: எதிர்கட்சியினரை எரிச்சலூட்ட ஒற்றைச் செங்கல், கொசுவர்த்தி சுருளை விளம்பரங்களில் முன்னிலைப்படுத்தி புதிய யுக்தியுடன் அமைச்சர் உதயநிதியை மதுரை திமுகவினர் வரவேற்றுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் கட்சி, அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 2 நாள் மதுரையில் அமைச்சர் உதயநிதி முகாமிட்டுள்ளார். உதயநிதியை வரவேற்க கொடி, தோரணங்கள் மட்டுமின்றி பல்வேறு வாசகங்கள், படங்களை பயன்படுத்தி நாளிதழ், சுவரொட்டிகள் மூலம் விளம்பரப்படுத்துவதில் திமுகவினரிடம் கடும் போட்டி நிலவுகிறது. கட்சியிலும், அதிகாரத்திலும் முதல்வருக்கு அடுத்த இடத்தில் உள்ள உதயநிதியின் கவனத்தை ஈர்க்க திமுகவினர் இத்தகைய விளம்பரங்களை செய்து வருகின்றனர். இதில், எய்ம்ஸ் என எழுதப்பட்ட ஒரு செங்கலை உதயநிதி தூக்கி காட்டியபடியும், புகையுடன் பற்றி எரியும் கொசு வர்த்தி சுருளும் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து திமுகவினர் கூறியது: “மதுரைக்கு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் பல ஆண்டுகளாகியும் பணிகள் துவங்கவில்லை. மத்திய அரசின் குறையை மக்களிடம் எடுத்துக்காட்டும் வகையில் எய்ம்ஸ் என எழுதப்பட்ட ஒத்த செங்கலை தூக்கி பிடித்தபடியை உதயநிதி கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பிரச்சாரம் செய்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததுடன் திமுக ஆட்சியையும் பிடித்தது. மத்திய அரசின் தாமதத்தை ஒரு செங்கல் மூலம் மிக எளிமையாக, அதே நேரம் மக்கள் மனதில் நீங்காத வகையில் உதயநிதி பதிவு செய்துவிட்டார்.
தற்போது சனாதனம் குறித்து உதயநிதி பேசியது தேசிய அளவில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் உதயநிதிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து தனது கருத்திலிருந்து உதயநிதி பின்வாங்குவார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், தான் சரியாகவே பேசியதாக மீண்டும், மீண்டும் உதயநிதி உறுதிப்படுத்தி வருகிறார்.
மதுரை கூட்டத்திலும் செங்கல், சனாதனத்தை மையப்படுத்தியே உதயநிதி பேசினார். தனக்கு எதிராக விமர்சனம் வைக்கும் பாஜக தேசிய தலைவர்கள் உள்ளிட்ட பலரது விமர்சனத்தை தான் எடுத்துக்கொண்ட விதத்தை வெளிப்படுத்த தனது எக்ஸ் பக்கத்தில் கொசுவர்த்தி சுருள் எரியும் படத்தை வெளியிட்டிருந்தார் உதயநிதி. இதன் மூலம் விமர்சனங்கள் கொசு தொல்லையைப் போன்றதாகவும், இதை விரட்ட (பதிலடி தர) கொசுவர்த்தி சுருள் போதுமானது என்பதை உதயநிதி முறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
பல லட்சம் பேர் பார்வையி்ட்ட கொசுவர்த்தி சுருள் படத்துக்கு பல்லாயிரம் பேர் லைக்கும் கொடுத்து வரவேற்றுள்ளனர். இதையடுத்தே செங்கல், கொசுவர்த்தி சுருளை வரவேற்பு விளம்பரங்களில் பயன்படுத்தியுள்ளோம். இது திமுகவினரை கவர்வதுடன் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினருக்கு கடும் எரிச்சலை ஊட்டும். அதுதான் எங்களுக்கு தேவை என்பதால் இந்த யுக்தியை பயன்படுத்துகிறோம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT