Published : 21 Sep 2023 05:08 PM
Last Updated : 21 Sep 2023 05:08 PM

செப்.23, 24-ல் சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்: பாதுகாப்பு பணியில் 16,500 காவலர்கள்

படம்: எம்.முத்துகணேஷ்

சென்னை: அமைதியான முறையிலும், எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் வழிபாடு செய்யப்பட்டு, விநாயகர் சிலைகளை ஊர்வலம் எடுத்து செல்லவும், சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கவும் சென்னையில் 16,500 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள், 2,000 ஊர்க்காவல் படையினர் கொண்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: செப்.18-ம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சென்னை பெருநகரில், விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கும், வழிபாடுகள் செய்வதற்கும் பின்னர் அவற்றை நீர் நிலைகளில் கரைப்பதற்கும், உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியும், மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அறிவுறுத்தல்படியும், தீயணைப்புத் துறை மற்றும் சென்னை மாநகராட்சியினரின் தடையில்லா சான்றுகளுடன் காவல்துறை அறிவித்த கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சிலைகளை நிறுவ சென்னை காவல் ஆணையர் உத்தரவின்பேரில், கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டன.

அதன்பேரில், சென்னை காவல்துறையின் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு, அமைதியான முறையில் வழிபாடுகள் செய்யவும், பின்னர் காவல்துறை அறிவிக்கப்பட்ட நீர் நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும், ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளதன்பேரில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் 1,519 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டதன் பேரில் பல்வேறு அமைப்பினர் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். வருகின்ற செப்.23 அன்று பாரதிய சிவசேனா அமைப்பினரும், செப்.24 அன்று இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று அனுமதிக்கப்பட்டுள்ள கடற்கரை நீர்நிலைகளில் கரைக்கவுள்ளனர்.

சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவின்பேரில், அமைதியான முறையிலும், எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் வழிபாடு செய்யப்பட்டு, விநாயகர் சிலைகளை ஊர்வலம் எடுத்து செல்லவும், சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கவும் சென்னை பெருநகரில் 16,500 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள், 2,000 ஊர்க்காவல் படையினர் கொண்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் சிலைகளை கரைக்க காவல்துறை அனுமதிக்கப்பட்ட நாட்களில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் மூலம் மட்டுமே விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு, அனுமதிக்கப்பட்ட சிலை கரைக்கும் இடங்களில் கரைக்கப்பட வேண்டும். சிலை கரைக்கும் இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டறைகள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சிலைகளை கரைப்பதற்கு Conveyar Belt. கிரேன்கள், படகுகள் உதவி கொண்டு சிலைகளை கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், சிலைகள் கரைக்கும் இடங்களில் அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், மோட்டார் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்கு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பைனாகுலர்கள் மூலம் கண்காணித்தும், குதிரைப்படைகள் மற்றும் All Terrain Vehicle (Beach Buggies) மூலம் தீவிர ரோந்து பணிகள் மேற்கொண்டு கண்காணித்தும் குற்ற நிகழ்வுகள் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழாமல் கண்காணிக்க தக்க பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்லும் வழித்தடங்கள் மற்றும் கரைக்கும் இடங்கள்: சென்னை பெருநகர காவல் ஆணையரகத்துக்குட்பட்ட > சீனிவாசபுரம், பட்டிணப்பாக்கம், > பல்கலைநகர், நீலாங்கரை, > காசிமேடு மீன்பிடி துறைமுகம், > திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்க காவல் துறையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகரில் நிறுவியுள்ள விநாயகர் சிலைகளை மேற்படி 4 இடங்களில் கரைக்க சென்னையில் 17 வழித்தடங்கள் பிரத்யேகமாக வகைப்படுத்தப்பட்டு, அவ்வழியே விநாயகர் சிலைகளை கொண்டு சென்று சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டு அதற்கான சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்பேரில், சென்னை பெருநகரில் நுங்கம்பாக்கம், சிந்தாதரிப்பேட்டை, எழும்பூர், புதுப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, பட்டாளம், சவுகார்பேட்டை, அயனாவரம், திருவல்லிக்கேணி, மைலாப்பூர், தேனாம்பேட்டை, தி.நகர், எம்ஜிஆர் நகர், வடபழனி, சைதாப்பேட்டை வில்லிவாக்கம், கொளத்தூர், திருமங்கலம், மதுரவாயல், கோயம்பேடு, அரும்பாக்கம் ஆகிய இடங்கள் மற்றும் இதன் சுற்றுப்புற இடங்களில் உள்ள விநாயகர் சிலைகள் குறிப்பிட்ட வழித்தடங்கள் வழியாக ஊர்வலமாக சென்று, பட்டிணப்பாக்கம், சீனிவாசபுரம் கடலில் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதே போல, அடையாறு, கிண்டி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் நங்கநல்லூர், வேளச்சேரி, திருவான்மியூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், நீலாங்கரை பல்கலை நகர் கடலிலும்,

வடசென்னை பகுதியான தங்கசாலை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர், கொடுங்கையூர் மற்றும் மாதவரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் காசிமேடு மீன்பிடி துறைமுகம் கடலிலும் கரைப்பதற்கும் திருவொற்றியூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்புறம் கரைக்க அனுமதி வழங்கப்பட்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பொது இடங்களில் அனுமதியுடன் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை, காவல்துறையின் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து அமைதியான முறையில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைத்து காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும், காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்படுகிறது, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x