Published : 21 Sep 2023 03:47 PM
Last Updated : 21 Sep 2023 03:47 PM
சென்னை: சென்னை மாநகராட்சியில் தீர்க்கப்படாத முக்கிய சுகாதார பிரச்சினையாக கொசுக்கள் இருந்து வருகின்றன. சென்னை மாநகரை ஆண்டுதோறும் டெங்கு கொசுக்கள் மிரட்டி வருகின்றன. நல்ல நீரில் முட்டையிட்டு வளரும் ஏடிஸ் ஈஜிப்டி (Aedes Aegypti) வகை கொசுக்களே டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் வைரஸை பரப்புகின்றன.
டெங்கு வைரஸை உடலில் வைத்திருக்கும் ஏடிஸ் ஈஜிப்டி வகை கொசுக்கள் மனிதனை கடிப்பதன் மூலம், அந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்ட மனிதர்களை ஏடீஸ் கொசுக்கள் கடிக்கும்போது, அந்த கொசுக்களுக்கும் டெங்கு வைரஸ் பரவுகிறது. இதுமட்டுமல்லாது, கொசுக்களிடம் உள்ள டெங்கு வைரஸ், அவை வைக்கும் முட்டைகளில் இருந்து உருவாகும் கொசுக்களுக்கும் கடத்தப்படுகிறது.
இந்த கொசுக்கள், மழை காலங்களில் பிளாஸ்டிக் குவளைகள், தேங்காய் சிரட்டைகள் போன்றவற்றில் தேங்கும் தூய மழைநீரில் உற்பத்தியாகின்றன. இக்கொசுக்கள் பெரும்பாலும் காலை அல்லது மாலை நேரங்களில் உலா வந்துகடிக்கக்கூடியவை. பெரும்பாலும் பொதுமக்களின் அலட்சியம், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்காதது, வீடுகளில் நீர்தேங்கும் வகையில் தேவையற்ற பொருட்களை வைத்திருப்பது போன்ற காரணங்களாலேயே டெங்குவை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.
இதில் வேடிக்கை என்னவென்றால், நாம் நமது வீட்டை தூய்மையாக வைத்திருந்தாலும், பக்கத்து வீட்டில் டெங்கு கொசுஉற்பத்தி ஆதாரங்கள் இருந்தால் நமக்கும் அது சிக்கல்தான். நமது அலட்சியம், பிறர் உயிரை பறிக்கும் என்பதை மக்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டிய தருணமிது.
பெரும்பாலும் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை டெங்கு காய்ச்சல் பாதிக்கிறது. சிலநேரங்களில் உயிரிழப்பையும் ஏற்படுத்திவிடுகிறது. கடந்த வாரம் மதுரவாயிலில் 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த பிறகு மாநகராட்சி நிர்வாகம் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
சென்னையில் 420 மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. 500-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் பல பள்ளிகளின் வகுப்பறைகள், கட்டிடங்களுக்கு நடுவே, காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் இல்லாத நிலையில் இயங்கி வருகின்றன.
இதுபோன்ற இடங்களில் தான் ஏடிஸ் வகை கொசுக்கள் வாழ்கின்றன. குழந்தைகளும் பகல் நேரங்களில், வீட்டை விட, பள்ளியில் தான் அதிக நேரம் இருக்கின்றனர். அதனால் குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு வீடுகளை விட பள்ளிகளிலேயே அதிகமாக உள்ளன என்பதை மாநகராட்சி பொதுசுகாதாரத் துறை உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம்.
எனவே சென்னை முழுவதும் உள்ள அனைத்து பள்ளி வளாகங்கள் மற்றும் அப்பள்ளிகளைச் சுற்றி 100 மீட்டர் சுற்றளவிலும் சிறப்பு டெங்கு ஒழிப்பு பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று விவரம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகரில் டெங்குக் காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கையாக மாநகரில் உள்ள சுமார் 17 லட்சம் வீடுகள் சிறுவட்டங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வட்டத்துக்கும் சுமார் 500 வீடுகள் கொண்ட தெருக்களில் வாரந்தோறும் கொசுப்புழு வளரிடங்களான,
மேல்நிலை, கீழ்நிலைத் தொட்டி, கிணறு,தேவையற்ற பொருள்கள் (டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள் உள்ளிட்டவை) ஆகியவற்றை கண்டறிந்து கொசுபுழுக்கள் இருப்பின் அதை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது கொசு ஒழிப்பு பணிக்கென 3,278 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் 424 மருந்து தெளிப்பான்கள், 120 பவர்ஸ்ப்ரேயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 300 ஸ்ப்ரேயர்கள், 324 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள், 1 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 68 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுக்களை கட்டுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசு மற்றும் மாநகராட்சி கட்டிடங்கள், புதிய கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களிலும் கொசுப்புழுக்கள் கண்டறிந்து அழிக்கப்பட்டுகின்றன. வீடுகள் மட்டுமல்லாது பள்ளிகளை சுற்றியும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவன வளாகங்களில் கொசு உற்பத்தி ஆதாரங்களை அகற்றி அழிக்கவும், அப்பணிகளை செப்.30-ம் தேதி வரை தொடரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருக்கு தொடர் காய்ச்சல் இருந்தால், உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும். சென்னை மாநகராட்சியின் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகளுடன் சிகிச்சை வார்டுகள் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் டெங்கு கொசு உற்பத்தியாகும் ஆதாரங்களை அகற்றி, டெங்குவை ஒழிக்க மாநகராட்சி மேற்கொண்டு வரும் பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
பள்ளி வளாகங்கள் மற்றும் அப்பள்ளிகளைச் சுற்றி 100 மீட்டர் சுற்றளவிலும் சிறப்பு டெங்கு ஒழிப்பு பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT