Published : 21 Sep 2023 01:21 PM
Last Updated : 21 Sep 2023 01:21 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளி என்ற இடத்தில் இயங்கி வரும் பாஸ்ட் புட் கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வடமாநில தொழிலாளர்கள் 26 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை அடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் உள்ள சிப் காட் தொழில் பூங்காவில் டெல்டா என்கிற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்கள் சுமார் 150 பேர் நேற்று, கிருஷ்ணகிரி கே. தியேட்டர் சாலையில் இயங்கி வரும் சக்தி பாஸ்ட் புட் (துரித உணவகம்) என்கின்ற கடையிலிருந்து சிக்கன் ரைஸ் வாங்கி வந்து சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் திடீரென்று ஒருவர் பின் ஒருவராக 26 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் 26 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 26 பேருக்கும் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 நபர்களுக்கு வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்ட சம்பவம் குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து கடை உரிமையாளரான சேட்டு (எ) சென்னப்பனை கைது செய்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, கிருஷ்ணகிரியில் உள்ள சிக்கன் ரைஸ் கடையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கிருந்த உணவுப் பொருட்களின் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக சேலத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வு அறிக்கை வந்த பின்னர் கடை மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கடையின் முன்பு கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து துரித உணவகங்கள், ஒட்டல்கள், இறைச்சி விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT