Published : 09 Dec 2017 12:00 PM
Last Updated : 09 Dec 2017 12:00 PM
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர், நீரோடி, இறையுமன்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 45 பேர் லட்சத்தீவில் மீட்கப்பட்டுள்ளனர்.
தற்போது கொச்சியில் தங்கவைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. அவர்களின் உடல்நிலை சீரானவுடன், குமரி திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஒக்கி புயலால் மாயமான கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 45 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படை, லட்சத்தீவின் கெளராஜ் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தமிழக மீனவர்களைக் கண்டது. உடனடியாக அவர்களை மீட்கப்பட்டு, கொச்சி மீன்பிடித் துறைமுகத்துக்கு அதிகாலை 5 மணிக்கு அழைத்து வரப்பட்டனர்.
விவரங்கள் சேகரிப்பு:
மீட்கப்பட்ட குமரி மீனவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களின் பெயர், வயது, ஊர் உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
முதற்கட்டமாக மீட்கப்பட்டவர்கள் அனைவரும் தூத்தூர், நீரோடி, இறையுமன்துதறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் என்று தெரியவந்துள்ளது.
மீன்வளத்துறை தமிழக அரசின் கூடுதல் செயலாளர் மற்றும் அதிகாரிகளோடு கேரள அதிகாரிகளும் கொச்சி துறைமுகத்தில் உள்ளனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை..
திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் திருவனந்தபுரம் அரசு பொது மருத்துவமனைகளில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் ஜார்ஜ் என்னும் மீனவரும் நீரோடி மீனவர் ஒருவரும் நாளை குமரி திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே மருத்துவமனைகளில் இறந்தவர்களை அடையாளம் காண, அவர்களின் உடல்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை பரிசோதனை மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT