Published : 21 Sep 2023 10:04 AM
Last Updated : 21 Sep 2023 10:04 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி- சென்னை இடையே வரும் 24-ம் தேதி முதல் ‘வந்தே பாரத்' ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவையை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
‘வந்தே பாரத்' எனப்படும் அதிவிரைவு ரயில்களின் பயண நேரம் குறைவு என்பதால் பயணிகள் மத்தியில் இந்த ரயில்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
ஜிபிஎஸ் டிராக்கர் வசதி, கேமரா வசதி, ஏசி வசதி என அனைத்தும் இந்த ரயிலில் உள்ளன. சென்னை - கோவை மற்றும் சென்னை- மைசூரு இடையேயான 'வந்தே பாரத்' ரயில்கள் தமிழகம் வழியே இயங்கி வருகின்றன. தமிழகத்தின் 3-வது 'வந்தே பாரத்' ரயிலாகவும், தென்தமிழகத்தின் முதல் 'வந்தே பாரத்' ரயிலாகவும் நெல்லை - சென்னை இடையே இயக்கப்பட உள்ள புதிய ரயிலை வரும் 24-ம் தேதி காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இதற்கான முன்னேற்பாடு பணிகளை திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த், முதுநிலை வணிக மேலாளர் ரவி பிரியா, முதுநிலை கோட்ட இயக்க மேலாளர் பிரசன்னா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
தொடக்க விழாவுக்கான மேடை அமைக்கும் இடம், ரயில் வந்து செல்லும் நடைமேடை, ரயில் பராமரிப்பு பணி மேற்கொள்ளக் கூடிய பிட் லைன், ரயில்வே முன்பதிவு கவுன்ட்டர்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் கூறியதாவது:
திருநெல்வேலி - சென்னை 'வந்தே பாரத்' ரயிலை வரும் 24-ம் தேதி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு 19-ம் தேதி இரவு தெற்கு ரயில்வேக்கு கிடைத்தது. அன்றைய தினம் 9 'வந்தே பாரத்' ரயில்களை பிரதமர் காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார். அதில் திருநெல்வேலி- சென்னை இடையேயான 'வந்தே பாரத்' ரயிலும் ஒன்று. இந்த ரயில் முதற்கட்டமாக விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான கட்டணம் குறித்து ரயில்வே நிர்வாகம் விரைவில் அறிவிக்கும். திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தை புனரமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்றார்.
சென்னை- திருநெல்வேலி 'வந்தே பாரத்' ரயில் 8 பெட்டிகளை கொண்டிருக்கும். அதில் ஒரு பெட்டி விஐபி.க்களுக்காக ஒதுக்கப்படும். 660 கிலோமீட்டர் தூரத்தை இந்த ரயில் 8 மணி நேரத்தில் கடக்கும். காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு, மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூரை அடையும். மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...