Published : 21 Sep 2023 10:10 AM
Last Updated : 21 Sep 2023 10:10 AM
நாகர்கோவில்: கேரளாவில் இருந்து நாள்தோறும் 200 டன்னுக்கும் மேற்பட்ட இறைச்சி, எலும்புகள் மற்றும் மருத்துவக் கழி வுகளை கொண்டு வந்து தமிழகத்தில் கொட்டுகின்றனர். இதைத் தடுத்து நிறுத்த முறையான கட்டுப்பாடுகளை அரசு விதிக்காததால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கல், ஜல்லி உட்பட கனிம வளங்கள் தினமும் 600 டாரஸ் லாரிகளுக்கு மேல் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. கேரள மாநிலத்தில் இயற்கையை பாதுகாக்கும் கடும் விதிமுறைகளால் அங்கு ஒரு கல்லை கூட எடுக்க முடியாது.
அதேநேரம் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் கேரளாவில் சேகரமாகும் இறைச்சி, மீன், மருத்துவக் கழிவுகளை, தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ள மலையோரங்கள், ஆற்றோரங்களில் கொட்டிச் செல்கின்றனர். குறிப்பாக குமரி மாவட்டத்தில் களியக்கா விளை, நெட்டா, களியல், காக்கா விளை ஆகிய எல்லைகளைத் தாண்டி தினமும் லாரி, டெம்போக்களில் மாட்டு எலும்பு கழிவுகள் மற்றும் இறைச்சி, மீன் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டுகின்றனர்.
பன்றிப் பண்ணைகளுக்கு உணவு கொண்டு செல்வதாக கூறி இந்த வாகனங்கள் செல்வது வழக்கமாக உள்ளது. வழிநெடுகிலும் அடிக்கும் துர்நாற்றத்தால் கிராம மக்கள் விரட்டிச் சென்று வாகனங்களை பிடிப்பதும், காவல் நிலையங்களில் ஒப்படைப்பதும் தொடர்கதையாகி உள்ளது.
ஆனால் இவற்றை கட்டுப்படுத்த முறையான விதிமுறையோ, தண்டனையோ வகுக்கப்படவில்லை. பிடிபடும் வாகனங்களை சில நாட்களிலேயே விடுவித்து விடுகின்றனர். தற்போது நிபா வைரஸ் கேரளாவில் பரவியுள்ள நிலையில் களியக்காவிளை உட்பட கேரள சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அவர்களின் கண்களில் இருந்தும் தப்பி எப்படி இந்த வாகனங்கள் பயணிக்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது. கேரளாவில் இருந்து மருத்துவ, மற்றும் இறைச்சி கழிவுகள் கொண்டு வந்து கொட்டுவதை கட்டுப்படுத்த சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என விஜய் வசந்த் எம்.பி. சமீபத்தில் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியிருந்தார்.
இதுகுறித்து களியக்கா விளையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஹேமந்த் லால் கூறியதாவது: இது பல ஆண்டுகளாக நடந்து வரும் சீர்கேடாக உள்ளது. கேரள மக்களிடம் உள்ள விழிப்புணர்வில் 10 சதவீதம் கூட இங்குள்ளவர்களுக்கு இல்லை. இறைச்சி கழிவுகளை தமிழகத்துக்கு கொண்டு வருவதே தமிழக ஓட்டுநர்கள்தான் என்பது வெட்கக்கேடானது.
கோவை, தேனி, தென்காசி, நீலகிரி என எல்லைகள் அனைத்திலும் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதை கட்டுப்படுத்த கேரளாவைப் போன்று இதுவரை வலுவான சட்டம் எதையும் தமிழக அரசு ஏன் கொண்டு வரவில்லை? கழிவுகளை ஏற்றி வருவோருக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT