Published : 21 Sep 2023 06:15 AM
Last Updated : 21 Sep 2023 06:15 AM

மின்வாரியத்தில் பணி வழங்க கோரி முதல்வரின் கொளத்தூர் தொகுதி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி

சென்னை: மின்வாரியத்தில் பணி வழங்கக் கோரி, முதல்வர் மு.க.ஸ்டாலினின் எம்எல்ஏ அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்களால் கொளத்தூரில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக மின்வாரிய காலிப் பணியிடங்களுக்கு உரிய தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு அவ்வப்போது நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், மின் வாரியத்தில் ‘கேங் மேன்’ எனப்படும் களப்பணியாளர்கள் பணியிடத்துக்கான எழுத்து மற்றும் உடல் தகுதித் தேர்வில் சில ஆண்டுகளுக்கு முன் சுமார் 15,000 பேர் பங்கேற்றனர்.

இதில், பெரும்பாலானவர்களுக்கு பணி வழங்கப்பட்ட நிலையில் சுமார் 5,400 பேருக்கு பணிவழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இவர்கள் விடுபட்டவர்கள் என்ற வகையில், இதுவரை பணிவழங்காமல் காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்தனர். பலமுறை கோரிக்கை விடுத்தும் இவர்களுக்கு பணியிடம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அவர்கள் விரக்தியில் இருந்தனர்.

இந்நிலையில், அவர்கள் சென்னை கொளத்தூரில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை முழுக்க போராட்டம் நடத்த முடிவு செய்தனர். திட்டமிட்டபடி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 800-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை திரண்டு முதல்வரின் எம்எல்ஏ அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

தகவல் அறிந்து 200-க்கும் மேற்பட்ட போலீஸார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அதற்குள் பலர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து, போராட்டக்காரர்கள் அனைவரையும் குண்டுக்கட்டாக போலீஸார் அப்புறப்படுத்தினர். தங்களுக்குப் பணி வழங்கும் வரை தங்களின் போராட்டம் தொடரும் எனப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x