Published : 19 Dec 2017 06:13 PM
Last Updated : 19 Dec 2017 06:13 PM

ஒக்கி நிவாரணம், சீரமைப்புக்கு ரூ.5,255 கோடி நிதி வழங்க வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

 

ஒக்கி புயல் குறித்துப் பார்வையிட வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் ‘ஒக்கி’ புயலின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் வடகிழக்குப் பருவத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கினார்.

மேலும் இதுதொடர்பான விரிவான அறிக்கையையும் சேதாரங்களின் மதிப்பீடுகளையும் தெரிவித்து, அவற்றை நிரந்தரமாகப் புனரமைக்க மத்திய அரசிடம் நிவாரணம் கோரி விரிவான மனு ஒன்றினை அளித்தார்.

தமிழக அரசு செய்தது என்ன?

இந்த ஆய்வின் போது தமிழக அரசு செய்தவை என்று பின்வருவனவற்றைப் பட்டியலிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ''கன்னியாகுமரி மாவட்டத்தை ஒக்கி புயல் பாதித்த உடன், துணை முதல்வர் உட்பட சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், 11 மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் ஆகியோர் மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டனர். பிற மாநிலங்களில் கரை சேர்ந்த மீனவர்களை அவரவர்களது சொந்த ஊர்களுக்கு அழைத்து வரும் பணியினை ஒருங்கிணைக்க 5 இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். பிற மாநிலங்களில் கரை சேர்ந்த மீனவர்கள் ஒவ்வொருக்கும் உணவுப்படியாக தலா ரூபாய் இரண்டாயிரமும், அதிகபட்சமாக மீன்பிடி விசைப்படகிற்கு ஆயிரம் லிட்டர் எரிஎண்ணெயும் வழங்கப்பட்டது.

மேலும், விவசாய நிலங்கள், மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றிற்கு ஏற்பட்ட சேதாரங்களை மதிப்பிடும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. மாநிலத்திலுள்ள உயர் அதிகாரிகளுடன் தினசரி அடிப்படையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை முடுக்கி விட்டோம். இதன் காரணமாக தடைபட்ட மின்சார விநியோகம் சீரமைப்பட்டது; குடிநீர் மீண்டும் தங்கு தடையின்றி விநியோகம் செய்யப்பட்டது; சாலைகளில் விழுந்த மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டு, சாலைகளில் ஏற்பட்ட சேதாரங்கள் சீரமைக்கப்பட்டு, போக்குவரத்து உடனடியாக தொடங்கப்பட்டது. மேலும், காணாமல் போன மீனவர்களைத் துரிதமாக மீட்கும் பொருட்டு இந்தியக் கடற்படை, கடலோரக் காவல் படை மற்றும் இந்திய விமானப் படை அதிகாரிகளுடனும் ஆய்வுக் கூட்டம் நடத்தினோம்.

மேலும், 12-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்தேன். அப்போது, உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூபாய் இருபது லட்சம் நிவாரண நிதியுதவி வழங்கவும், ஊனமடைந்த மீனவர்களுக்கு மறுவாழ்வு நிதியாக ரூபாய் ஐந்து லட்சம் வழங்கவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கவும் உத்தரவிடப்பட்டது. மேலும், மீனவர் குடும்பங்களுக்கு, வாழ்வாதார உதவியாக ஐந்தாயிரம் ரூபாயும், காணாமல் போன மீனவர் குடும்பங்களுக்கு சிறப்பு வாழ்வாதார உதவியாக ஐந்தாயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிடப்பட்டது.

மேலும், இறந்த மீனவர் குடும்பத்தில் ஒருவருக்கு அவரவர் கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு தமிழ்நாடு அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வழங்கவும் உத்தரவிட்டார். காணாமல் போன மீனவர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க ஏதுவாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் ஒரு குழுவை நியமித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோன்று, மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, அவர்களுக்கும் நிவாரண உதவியாக குடும்பம் ஒன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது

ஒக்கி புயலால் 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 48,500 முதல் 63,500 ரூபாய் வரையும், ரப்பர் மர விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்புக்கு 32,000 ரூபாய் உட்பட ஹெக்டேர் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாயும், கிராம்பு பயிர் பாதிப்புக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 28,000 ரூபாய் என நிவாரணத் தொகை வழங்கவும், பிற வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு உரிய நிவாரணமும் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

மேலும் ஒக்கி  புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் மிகவும் கடுமையானதாக இருப்பதால், அதனை தேசியப் பேரிடராக அறிவிக்க கோரிக்கை விடுத்தார். கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பிரத்யேக கடற்படை நிலையம் ஒன்றினை அமைக்கவும், அதில் தேடுவதற்குத் தேவையான ஹெலிகாப்டர்கள், இறங்கு தள வசதிகள் மற்றும் தொலைதூரத் தொடர்பு வசதி ஆகியவற்றுடன் விரைவில் நிறுவிடவும் பிரதமரை வலியுறுத்தினார்.

தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்குக் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

'' தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 747 கோடி உடனடியாக விடுவிக்க வேண்டும். தற்போது பேரிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரணத் தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், குறிப்பாக, உயிரிழப்பிற்கு ரூபாய் 4 லட்சத்திலிருந்து ரூபாய் 10 லட்சமாகவும், ஊனமடைந்தவர்களுக்கு ரூபாய் 2 லட்சத்திலிருந்து ரூபாய் 5 லட்சமாக உயர்த்தவும், வாழை மரங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 13,500/-லிருந்து ரூபாய் 1,25,000/- ஆகவும், ரப்பர் மரங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18,000/-லிருந்து ரூபாய் 2,50,000/- ஆகவும் உயர்த்தப்பட வேண்டும்;

புயல், காற்று மற்றும் மழையினால் பாதிக்கப்படும் உயர் அழுத்த மின்விநியோக கட்டமைப்பு, மின் மாற்றிகள், துணை மின்நிலையங்கள் மற்றும் 11 கிலோவோல்ட்டுக்கு அதிகமான உயர் மின்அழுத்தப் பாதைகள் ஆகியவற்றிற்கும் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவி அளிக்கப்பட வேண்டும்; மத்திய அரசின் 90 சதவிகித மான்யத்துடன், 1500 உயர் மின்அதிர்வெண் கம்பியில்லா தொலைதொடர்பு சாதனங்கள் வழங்கவும், தமிழ்நாட்டிலுள்ள கடலோரங்களில் உயர்மின் அதிர்வெண் கட்டுப்பாட்டு அறைகளை அமைக்கவும், உயர்மின் அதிர்வெண் சேனல்களை உபயோகிக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்;

மீனவர்களுக்கு அவ்வப்போது வானிலை பற்றிய அறிவிப்புகளை தமிழில் தெரியப்படுத்த பிரத்யேக செயற்கைக் கோள் ரேடியோ அலைவரிசை ஒன்றினை உடனடியாக அமைக்க வேண்டும்; மீனவர்களின் பிரச்சினைகளுக்கு, குறிப்பாக கன்னியாகுமரி மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண தொலைத்தொடர்பு வசதி, மீன் பதப்படுத்தும் பூங்கா போன்ற அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம் ஒன்றினை ஏற்படுத்த வேண்டும். மேலும், கடல் அரிப்பினை தடுக்கும் பொருட்டு, கடல் அலைதடுப்புச் சுவர்கள் அமைக்க வேண்டும். இப்பணிகளுக்கென 4,218 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.

மீன் பிடிக்கச் சென்று கரை திரும்பாத தமிழக மீனவர்கள் அனைவரையும் தேடிக் கண்டுபிடித்திட மத்திய பாதுகாப்புத் துறைக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும். குறிப்பாக, ஆழ்கடலுக்குச் சென்றுள்ள கடைசி மீனவர் கிடைக்கின்ற வரையில் தேடுதல் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்; ஒக்கி புயலினால் ஏற்பட்ட சேதங்களுக்கான மீட்பு, நிவாரணம் மற்றும் நிரந்தர சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள 5,255 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும்;

மேலும், சென்னை மற்றும் இதர கடலோர மாவட்டங்களில் வடகிழக்குப் பருவ மழையால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்கவும், இனி சென்னைக்கு வெள்ளத்தால் பாதிப்பு ஏதும் ஏற்படாதவாறு நிரந்தரச் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு 4,047 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டும்.

ஆக மொத்தம், ஒக்கி புயல் பாதிப்புகள், சென்னை மற்றும் இதர கடலோர மாவட்டங்களில் வடகிழக்குப் பருவ மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நிரந்தரமாகச் சீரமைக்கும் பணிகளுக்கென 9,302 கோடி ரூபாயை மத்திய அரசு உடனடியாக தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கோரப்பட்டு இருந்தது.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மேற்கண்ட கோரிக்கை மனு குறித்து விளக்கிய பின். ’’பிரதமர் இதுகுறித்து பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளர். ஒக்கியால் பாதிக்கப்பட்ட குமரியை தேசியப் பேரிடராக அறிவிக்கவும் வலியுறுத்தியுள்ளேன். அதையும் பிரதமர் பரிசீலிப்பதாகச் சொல்லியுள்ளார்.

மீனவர்களுக்கு பாரபட்சம் இல்லாமல் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதே போல் பிறருக்கும் கேட்கிறீர்கள். ஆட்சியர் பரிசீலனை செய்ய சொல்கிறேன்'' என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x